செய்திகள்
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட பாதுக்காப்பு

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் - ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு

Published On 2019-09-25 07:16 GMT   |   Update On 2019-09-25 07:16 GMT
பயங்கரவாதிகள் ஏற்கனவே தாக்குதல் நடத்தி இருந்ததால் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு அளிக்ககூடிய பாதுகாப்பு அவர்களுக்கு போடப்பட்டுள்ளது.
கராச்சி:

இலங்கை கிரிக்கெட் அணி 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

லாகூரில் வீரர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். சில வீரர்கள் காயம் அடைந்தனர்.



இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் எந்த அணியும் சர்வதேச போட்டிகளில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஜிம்பாப்வே அணி மட்டும் ஒருமுறை விளையாடியது. அந்த அணி உள்ளூர் மைதானமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆடி வந்தது.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

கராச்சி விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் ஏற்கனவே தாக்குதல் நடத்தி இருந்ததால் இலங்கை அணிக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அளிக்க கூடிய பாதுகாப்பு அவர்களுக்கு போடப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் ஓட்டல், செல்லும் வழி, மைதானம் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளது.

பாதுகாப்பு கருதி 10 வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டனர். ஒருநாள் போட்டி கேப்டன் கருணாரத்னே, 20 ஓவர் அணி கேப்டன் மலிங்கா உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் ஆடவில்லை.

இதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. பாகிஸ்தானில் விளையாடினால் ஐ.பி.எல்.லில் ஆட முடியாது என்று மிரட்டப்பட்டதாக அந்நாட்டு முன்னாள் வீரர்கள் சாடி இருந்தனர்.

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 2-வது ஆட்டம் 29-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி அக்டோபர் 2-ந்தேதியும் நடக்கிறது.

20 ஓவர் ஆட்டங்கள் அக்டோபர் 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஒருநாள் ஆட்டங்கள் கராச்சியிலும், 20 ஓவர் போட்டிகள் லாகூரிலும் நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்த இரு நகரங்களில் மட்டுமே போட்டி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் தொடரில் விளையாடும் இலங்கை ஒருநாள் போட்டி அணி வீரர்கள் விவரம்:-

திரிமானே (கேப்டன்), மினோத் பங்கா, ஹசரங்கா, நுவன் பிரதீப், ஒசாடா, பெர்னாண்டோ, அவிஷ்கா பெர்னாண்டோ, குணதிலகா, ஷேகன் ஜெயசூர்யா, லகிரு குமாரா, எஞ்சலோ பெரைரா, ககன் ரஜிதா, சமர விக்ரமா, சன்டகன், தகன் ‌ஷனகா, இசுரு உதனா.

20 ஓவர் அணிக்கு தகன் ‌ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். லகிரு மது‌ஷனகா, பங்கா ரஜபக்சா ஆகியோர் இந்த அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இலங்கை அணி பாகிஸ்தான் செல்ல கூடுதல் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஹசிம்கான் மறுத்துள்ளார்.
Tags:    

Similar News