செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல்

3-வது ஒருநாள் கிரிக்கெட் - இந்தியாவிற்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2019-08-14 19:59 GMT   |   Update On 2019-08-14 19:59 GMT
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்.
போர்ட் ஆப்ஸ்பெயின்:

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்ஸ்பெயினில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஒரே மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கீமோ பால், பாபியன் ஆலென் இடம் பெற்றனர்.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 2-வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.



தொடர்ந்து ஆடிய கெய்ல், இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், கலீல் அகமதுவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டார். இவின் லீவிசும் இந்திய பந்து வீச்சை பதம் பார்க்க தவறவில்லை. இதனால் முதல் 10 ஓவர்களில் அந்த அணியின் ஸ்கோர் 114 ரன்களாக எகிறியது. 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு முதல் 10 ஓவர்களில் ஒரு அணி எடுத்த அதிகபட்சம் இது தான். கெய்ல் தனது 54-வது அரைசதத்தை கடந்தார்.

ஸ்கோர் 115 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் இவின் லீவிஸ் (43 ரன், 29 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் கிறிஸ் கெய்ல் (72 ரன், 41 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) கலீல் அகமதுவின் பந்து வீச்சில் விராட் கோலியிடம் சிக்கினார்.

இதன் பிறகு அவர்களின் ரன்வேகம் குறைந்தது. 22 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.   இறுதியில் ஆட்டத்திற்கான ஓவர் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.  

தொடர்ந்து ஆடிய ஹெட்மயர், ஷாய் ஹோப் ஜோடி ரன்களை வெகுவாக குவிக்க தொடங்கினர்.  ஆனால் ஆட்டத்தின் 24.5 வது ஓவரில் சமி வீசிய பந்தில் ஹெட்மயர்  25 (32) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.  தொடர்ந்து இறங்கிய  நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினார்.   நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களாக விளாசி தள்ளி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார்.  ஆனால் இந்த ஜோடியின் ஷாய் ஹோப் 24 (52) விக்கெட்டை இந்திய அணி வீரர் ஜடேஜா பிரித்தார்.  அவரை தொடர்ந்து  ஜேசன் ஹோல்டர் களம் இறங்க ஆட்டத்தின் 30.1வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் 16 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  

இதன் பின் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர்.  தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஜேசன் ஹோல்டர் 14 (20), கார்லோஸ் பிராத்வைட் 16  (14) ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தனார்.   இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது.   இறுதியில் பாபியன் ஆலென் 6(7) ரன்னும், கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும், சாஹல், ஜடேஜா  இருவரும் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.  

இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 241 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News