செய்திகள்

இலங்கை போர்டு லெவன் அணிக்கெதிராக ஜோ ரூட் சதம் அடித்தார்

Published On 2018-10-31 11:35 GMT   |   Update On 2018-10-31 11:35 GMT
இலங்கை லெவன் போர்டு லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். #SLvENG
இங்கிலாந்து அணி இலங்கை சென்று விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வென்றுள்ள நிலையில், நவம்பர் 6-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

இதற்கு முன் இங்கிலாந்து இரண்டு நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இலங்கை போர்டு லெவன் அணிக்கெதிரான முதல் பயிற்சி ஆட்டம் கொழும்பில் நேற்று தொடங்கியது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்தின் பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை.

இதனால் இலங்கை முதல்நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பர்ன்ஸ் 47 ரன்கள் சேர்த்தார். ஜென்னிங்ஸ் 13 ரன்னிலும், டென்லி 25 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 117 பந்தில் 13 பவுண்டரிகளுடன் சதம் விளாசிய ஜோ ரூட் 100 ரன்னில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 31 ரன்கள், பட்லர் 60 ரன்கள் சேர்த்தனர். இரண்டு நாட்கள் கொண்ட ஆட்டம் என்பதால் போட்டி டிராவில் முடிகிறது. 2-வது பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.
Tags:    

Similar News