செய்திகள்

இன்னும் காலம் தாழ்த்தியிருந்தால் மணிக்கட்டே போயிருக்கும்- ஷாகிப் அல் ஹசன்

Published On 2018-09-30 09:12 GMT   |   Update On 2018-09-30 09:12 GMT
சுண்டு விரல் காயம் மிகவும் மோசமானதால் மூன்று மாதங்கள் ஓய்வு தேவைப்படும் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார் #ShakibAlHasan
வங்காள தேச கிரிக்கெட் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். 31 வயதாகும் இவருக்கு இலங்கை தொடரின்போது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை செய்யவில்லை. சமீபத்தில் வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. அப்போது சுண்டு விரலில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கியதால் வங்காள தேச கிரிக்கெட் வாரியம் ஷாகிப் அல் ஹசன் விளையாட வேண்டும் என்று விரும்பியது. ஷாகிப் அல் ஹசனும் அணியில் இடம்பிடித்து விளையாடினார். பாகிஸ்தான் போட்டிக்கு முன் வலி அதிகம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகினார்.

அத்துடன் உடனடியாக சொந்த நாடு திரும்பினார். சொந்த நாடு திரும்பிய வேகத்தில் சுண்டு விரல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் காயம் ஏற்பட்ட இடத்தில் இருந்து மணிக்கட்டு வரைக்கும் சீழ் வைத்திருந்ததால் உடனடியாக ஆபரேசன் செய்ய இயலாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

உடனடியாக காயத்தில் இருந்து சீழை அகற்றும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். தற்போது ஓரளவிற்கு சீழ் அகற்றப்பட்டுள்ளது. ஒருவேளை இரண்டு மூன்று நாட்கள் தாமதமாக வந்திருந்தால் மணிக்கட்டு செயல் இழந்து போயிருக்கும் என்று கூறிய ஷாகிப் அல் ஹசன் காயம் குணமடைய மூன்று மாத காலம் ஆகும் என தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘நான் மருத்துவமனைக்கு வந்த போது, டாக்டர்கள் என்னிடம் எவ்வளவு சீழ் வெளியேற்ற முடியுமோ, அவ்வளவு சீழை வெளியேற்ற வேண்டும். நான் தாமதம் செய்திருந்தால், மணிக்கட்டு வரை பரவிய நோய்தொற்று மிகவும் மோசமாக நிலையை அடைந்திருக்கும். இன்னும் சில நாட்கள் தாமத்திருந்தால், என்னுடைய மணிக்கட்டு செயல்படாமலேயே போயிருக்கும்.

டாக்டர்கள் என்னுடைய காயத்தில் இருந்து சீழை வெளியே எடுத்த பின்னர், தற்போது பரவாயில்லை. இந்த பிரச்சினை இன்னும் தீரவில்லை. இதனால் காயம் அடைந்த விரலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அறுவை சிகிச்சை நடைபெறும். அதன்பின் 8 வாரங்கள், அதாவது மூன்று மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்த விலகி இருக்க வேண்டியது இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News