செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ

Published On 2018-06-23 10:48 GMT   |   Update On 2018-06-23 10:48 GMT
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகியுள்ள நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட சம்பள பாக்கியை வீரர்களுக்கு வழங்க பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. #BCCI #CentralContractPayments

புதுடெல்லி:

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. வினோத் ராய் தலைமையிலான இந்த நிர்வாக கமிட்டி, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதில், வரவேற்கத்தக்க அம்சங்களும் இருந்தன. பல நடவடிக்கைகள் விமர்சனத்திற்கும் உள்ளாயின.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய உயர்வு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏ+ பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி, பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடி மற்றும் சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ஆகிய முறைகளில் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டது.

இந்த ஊதிய உயர்வையே வீரர்கள் போராடிதான் பெற்றார்கள் என அப்போது கூறப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு நிர்வாகிகள் செலவினங்களை குறைப்பதில் குறியாக இருந்தனர்.

இன்று இந்திய அணி இங்கிலாந்து டூர் செல்ல உள்ளது. சுமார் 3 மாதங்கள் அங்கு தங்கியிருந்து 5 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போடப்பட்ட புதிய ஊதிய ஒப்பந்தப்படி ஊதிய உயர்வை வீரர்கள் பெறவில்லை என தகவல்கள் வெளியானது.

இதனிடையே, புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து நேற்று பொறுப்பு நிர்வாகிகள் கூடி முடிவெடுத்தனர். அப்போது வீரர்களுக்கான உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க நிர்வாகிகள் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்ட சம்பள பாக்கியை வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கியுள்ளது. இதனால் வீரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். #BCCI #CentralContractPayments
Tags:    

Similar News