செய்திகள்

ஐபிஎல் 2018 - ரூ.20 கோடி பரிசு தொகையுடன் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Published On 2018-05-27 18:27 GMT   |   Update On 2018-05-27 18:57 GMT
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய சென்னை அணி, ரூ.20 கோடி பரிசுத்தொகையுடன் கோப்பையை வென்றது. #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
மும்பை:

11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சு தேர்வு செய்தார்.



இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தது. இதன்மூலம்  சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்.

இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்தது. வாட்சன், டுபிளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

டுபிளசிஸ் 10 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஐதராபாத் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது.

சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய வாட்சன் 57 பந்துகளில் 8 சிக்சர், 11 பவுண்டரியுடன் 117 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் 117 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதையடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் விருதை ஷேன் வாட்சன் கைப்பற்றினார். #IPL2018 #VIVOIPL #CSKvSRH #IPL2018Final
Tags:    

Similar News