செய்திகள்

ஸ்டேடியத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்துக்கு 8 ரன்- டோனி

Published On 2018-04-12 04:14 GMT   |   Update On 2018-04-12 05:53 GMT
பேட்ஸ்மேன், ஸ்டேடியத்தை விட்டு வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல். போட்டியில் 8 ரன் வழங்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-

2 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடியதோடு, வெற்றியும் பெற்றது உற்சாகமான உணர்வை தருகிறது. கொல்கத்தா பேட்டிங், சென்னை அணியின் பேட்டிங் இரண்டுமே குழுமியிருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. நிறைய சிக்சர்கள் பறந்தன. பேட்ஸ்மேன், ஸ்டேடியத்தை விட்டு வெளியே துரத்தியடிக்கும் ஒவ்வொரு பந்துக்கும் ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 ரன் (அதாவது 8 ரன்) வழங்க வேண்டும்.

உணர்ச்சியின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். ஆட்டம் பரபரப்பானதால் எனது இதயதுடிப்பும் எகிறியது. அதனால் தான் எங்களுக்கு ஓய்வறை ஒன்று உள்ளது. எனது உணர்ச்சிகளை ஓய்வறையில் வெளிப்படுத்துவேனே தவிர, அனைவரும் பார்க்கும் மைதானத்தின் எல்லைக்கோட்டையொட்டி வீரர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் பெரிய அளவில் காட்டமாட்டேன். இங்கு அமரும் போது குறிப்பிட்ட தருணத்தில் பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளர் மீது நாங்கள் நம்பிக்கை வைப்பது அவசியம். நேர்மறையான எண்ணங்கள் சாதிப்பதற்கு உதவும். களத்தில் நம் உணர்ச்சிகளை அதிகமாக கொட்டினால், அது நம்மை பற்றி வர்ணனையாளர்கள் பேசுவதற்கு இடம் கொடுப்பது போல் ஆகிவிடும்.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை இரண்டு அணிக்குமே பந்து வீச்சாளர்களுக்கு கடினமான நாளாக அமைந்தது. ஆனால் ரசிகர்கள் நிச்சயம் குதூகலம் அடைந்திருப்பார்கள்.

இவ்வாறு டோனி கூறினார். #IPL
Tags:    

Similar News