செய்திகள்

ஸ்காட்லாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2018-03-21 17:22 GMT   |   Update On 2018-03-21 17:22 GMT
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் ஸ்காட்லாந்தை விழ்த்தியதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. #ICCWCQ #WestIndies #Scotland
ஹராரே:

உலக கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான போட்டியில் ஸ்காட்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஜிம்பாப்வேயில் இன்று மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் களமிறங்கினார்கள். முதல் பந்திலேயே கிறிஸ் கெயில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பரும் ரன் எடுக்காமல் வெளியேறினார்.

அதன்பின், களமிறங்கிய சாமுவேல்ஸ், லீவிசுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். 3-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தனர். லெவிஸ் 66 ரன்களுடனும், சாமுவேல்ஸ் 51 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, 48.4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 198 ரன்கள் சேர்த்தது.



ஸ்காட்லாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் சப்யான் ஷரீப், பிராட்லி வீல் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் விரைவில் அவுட்டாக்கினர். இதனால் அவர்கள் ரன் குவிக்க சிரமப்பட்டனர். அடுத்த வந்தவர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தது.

ஸ்காட்லாந்து அணி 35. 2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது ஜார்ஜ் முன்சே 32 ரன்ளுடனும், மைக்கேல் லீச் 12 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமர் ரோச், ஆஷ்லே நர்ஸ் தலா 2 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உலக கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது. #ICCWCQ #WestIndies #Scotland 
Tags:    

Similar News