செய்திகள்

4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய 17 வயது இளம் வேகபந்து வீச்சாளர்

Published On 2018-03-10 10:50 GMT   |   Update On 2018-03-10 10:50 GMT
பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதே ஆன ஷஹீன் ஷா அப்ரிடி டி20 லீக்கில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் குவாண்டர்ஸ் அணிகள் மோதின.

முதலில் முல்தான் சுல்தான்ன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. 14-வது ஓவரை ஷஹீன் ஷா அப்ரிடி வீசினார். 6 அடி, 6 இன்ச் உயரம் கொண்ட இடது கை வேகப்பந்து வீச்சாளரான அப்ரிடி முதல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

16-வது ஓவரை ஷஹீன் ஷா அப்ரிடி வீசினார். இந்த ஓவரில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த ஓவரில் விட்டுக்கொடுத்த இரண்டு ரன்களும் லெக்பைஸ் என்பதால் அவரது கணக்கில் சேரவில்லை. 18-வது ஒவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி 1 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3 ஓவரில் 1 மெய்டன் உடன் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.



20-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த அப்ரிடி, 3-வது மற்றும் 4-வது பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் 3.4 ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். 92 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த சுல்தான் முல்தான்ஸ் அணி 114 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆனது.

இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் இலங்கை வீரர் ஹெராத், ரஷித் கான், சொஹைல் தன்வீர் ஆகியோர் 3 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தனர். அவர்களுக்கு அடுத்த இடத்தை அப்ரிடி பிடித்துள்ளார்.

ஷஹீன் அப்ரிடி 4 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி குறைவான ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அனில் கும்ப்ளே 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News