செய்திகள்

இரும்பு மனிதன் தங்கப்பதக்கம் வென்று சாதனை: இந்திய வீரருக்கு ஏமாற்றம்

Published On 2018-02-17 03:03 GMT   |   Update On 2018-02-17 03:03 GMT
குளிர்கால ஒலிம்பிக் நேற்று நடந்த ஸ்கெல்டன் போட்டியில் தென்கொரியா வீரர் யுன் சங்-பின் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
பியாங்சாங்:

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்’ போட்டியின் பிரிஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் 26 வயதான ஜெகதீஷ்சிங் களம் இறங்கினார். கம்பு ஊன்றி 15 கிலோ மீட்டர் தூரம் பனியில் சறுக்கி ஓட வேண்டிய இந்த பந்தயத்தில் பங்கேற்ற 119 பேரில், 103-வது வீரராக ஜெகதீஷ்சிங் வந்து சொதப்பினார். அவர் இலக்கை 43 நிமிடம் 0.3 வினாடிகளில் கடந்தார். தங்கப்பதக்கத்தை வென்ற சுவிட்சர்லாந்து வீரர் டாரியோ கலோக்னாவை விட ஜெகதீஷ்சிங் 9 நிமிடம் 16.4 வினாடிகள் மெதுவாக வந்தது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே மற்றொரு இந்திய வீரர் ஷிவ கேசவன் தனிநபர் ‘லஜ்’ பந்தயத்தில் 34-வது இடம் பெற்ற ஏமாற்றத்துடன், சர்வதேச போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியர்கள் யாரும் பதக்கம் வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

‘ஸ்கெல்டன்’ போட்டியில் தென்கொரியா வீரர் யுன் சங்-பின் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். ‘ஸ்கெல்டன்’ போட்டி என்பது, சக்கரம் பொருத்தப்பட்ட பலகையில் படுத்துக்கொண்டு குறுகிய வளைவுகள் கொண்ட சரிவான பாதையில் சீறிப்பாயக்கூடியதாகும். இதில் யுன் சங்-பின் 50.02 வினாடிகளில் இலக்கை எட்டி, ‘ஸ்கெல்டன்’ பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.



23 வயதான யுன் சங்-பின் அணிந்திருக்கும் தலைகவசம், மற்றும் சிவப்பு நிற ரேசிங் உடை ‘இரும்பு மனிதன்’ என்ற கார்ட்டூன் கதாநாயகனின் தோற்றத்தை போன்று இருக்கிறது. அதனால் யுன் சங்-பின்னை ரசிகர்கள் ‘இரும்பு மனிதன்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். #tamilnews
Tags:    

Similar News