செய்திகள்

பிக் பாஷ் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தியது சிட்னி தண்டர்

Published On 2018-01-11 11:49 GMT   |   Update On 2018-01-11 12:05 GMT
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது. #BBL07 #SydneyThunder #PerthScorchers

பிரிஸ்பேன்:

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இன்று ல் நடைபெற்ற லீக் போட்டியில் சிட்னி தண்டர் - பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா, கர்டிஸ் பாட்டர்சன் ஆகியோர் களமிறங்கினர். கவாஜா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். பாட்டர்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷேன் வாட்சன் களமிறங்கினார். அவர் 21 ரன்கள் எடுத்து பிரஸ்னன் ஆட்டமிழந்தார். அடுத்து கல்லம் பெர்குசன் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய கவாஜா அரைசதம் கடந்தார். 



கவாஜா 85 ரன்கள் ( 51 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்ஸர் ) எடுத்திருந்த நிலையில் அகார் பந்தில் கிளிங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெர்குசன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. பென் ரோரெர் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். பெர்த் அணி பந்துவீச்சில் டிம் பிரஸ்னன் இரண்டு விக்கெட்களும், அஷ்டன் அகார், மேத்தீவ் கெல்லி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில்லியம் பொசிஸ்டோ 9 ரன்களிலும் மைக்கெல் கிளிங்கர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கெமரான் பான்கிராப்ட் நிதானமான ஆட்டத்தை வெளிகாட்ட, எதிர்முனையில் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஷ்டன் டர்னர் 3 ரன்னிலும், ஆடம் வோஜஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது பெர்த் அணி 6.2 ஓவர்களில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 

அதைத்தொடர்ந்து பான்கிராப்ட்டுடன், ஹில்டன் கார்ட்ரைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய பான்கிராப்ட் அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து கார்ட்ரைட்டும் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை மெக்லெனகன் வீசினார். அந்த ஓவரில் பெர்த் அணி 20 ரன்கள் எடுத்தது. பெர்த் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணி வெற்றி பெற்றது.



சிறப்பாக விளையாடி 85 ரன்கள் அடித்த சிட்னி அணியின் உஸ்மான் கவாஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை தொடர்ந்து சிட்னி தண்டர் அணி புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. நாளை நடைபெறும் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BBL07 #SydneyThunder #PerthScorchers
Tags:    

Similar News