செய்திகள்

வர்ணனையை விட பயிற்சியாளர் பதவி அதிக மனநிறைவை தருகிறது: ராகுல் டிராவிட்

Published On 2017-12-17 08:08 GMT   |   Update On 2017-12-17 08:08 GMT
வர்ணனையுடன் இளையோர் அணிக்கு பயிற்சியாளராக இருப்பது அதிக அளவில் மனநிறைவை தருகிறது என ‘கிரிக்கெட் தடுப்புச் சுவர்’ என அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ‘தடுப்புச் சுவர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். 44 வயதாகும் இவர், கடந்த 2012-ம் ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்டோடு ஓய்வு பெற்றார். 164 டெஸ்ட், 344 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களில் டிராவிட்டும் ஒருவர்.

ஓய்வு பெற்ற பின்னர் ஒன்றிரண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனையாளராக செயல்பட்டார். அதன்பின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி மற்றும் இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

வர்ணனையாளராக செயல்படுவதை விட பயிற்சியாளராக செயல்படுவது மனநிறைவைத் தருகிறது என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நான் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சில போட்டிகளுக்கு வர்ணனையாளராகவும், கார்பரேட் நிறுவனங்களில் உரையும் நிகழ்த்தியுள்ளேன்.



ஆனால், பயிற்சியாளர் பதவியை நான் சந்தோசமாக செய்து வருகிறேன். வர்ணனை தொழில் மிகவும் சிறப்பானதுதான். ஆனால், அதை செய்து முடித்த நாள் முடிவில் மனநிறைவை தருவதில்லை. இளைஞர்களோடு சேரும்போது, அவர்களுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை எனக்கு அதிக அளவில் திருப்தியை கொடுக்கிறது.

நான் தற்போது ஏன் இதை செய்து கொண்டிருக்கிறேன் என்றால், வயதான பிறகு பயிற்சியாளர் பணியை தொடர்வது கடினமாகிவிடும்’’ என்றார்.
Tags:    

Similar News