செய்திகள்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதியில் நுழைந்தார்

Published On 2017-10-20 21:39 GMT   |   Update On 2017-10-21 02:45 GMT
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் உள்ளூர் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறினார்.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி உலகின் நம்பர் ஒன் வீரராக விளங்கும் டென்மார்க் வீரர் விக்டர் அக்செலான்  மற்றும் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் 14-21, 22-20, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் கிடாம்பி வெற்றி பெற்றார். இந்த போட்டி 55 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

ஆட்டத்தின் முதல் செட்டில் உள்ளூர் வீரர் அக்செலான் சிறப்பாக விளையாடினார். இதனால் 14-21 என்ற புள்ளிக்கணக்கில் அவர் முதல் செட்டை கைப்பற்றினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் இந்திய வீரர் கிடாம்பி சுதாரித்துக் கொண்டார். அவர் அக்செலானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் கிடாம்பி இரண்டாவது செட்டை 22-20 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர் கிடாம்பி ஆக்ரோஷத்துடன் விளையாடினார். எனவே அவர் 21-7 என்ற புள்ளிக்கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றினார்.

இறுதியில், 14-21, 22-20, 21-7 என்ற புள்ளிக்கணக்கில் உள்ளூர் வீரரை வீழ்த்தினார். இதன்மூலம் கிடாம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் நடந்த போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.
Tags:    

Similar News