செய்திகள்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: 216 ரன்னில் சுருண்டது இலங்கை

Published On 2017-08-20 12:33 GMT   |   Update On 2017-08-20 12:33 GMT
தம்புல்லாவில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 216 ரன்னில் ஆல்அவுட் ஆகியுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா 44 பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு டிக்வெல்லா உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இலங்கை அணி 18.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டிக்வெல்லா 65 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 139 ரன்னாக இருக்கும்போது டிக்வெல்லா 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

டிக்வெல்லா அவுட்டான சிறிது நேரத்தில் மெண்டிஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் பட்டேல் பந்தில் க்ளீன் போல்டானார். இலங்கை அணி 27.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் இலங்கையின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அந்த அணி 43.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 216 ரன்னில் சுருண்டது. கடைசி 66 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது இலங்கை.


தொடக்க விக்கெட்டை பிரித்த சந்தோசத்தில் சாஹல்

தரங்கா (13), கபுகேதரா (1), டி சில்வா (2), பெரேரா (0), சண்டகன் (5), மலிங்கா (8), பெர்னாண்டோ (0) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மேத்யூஸ் 36 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

இந்திய அணி சார்பில் அக்சார் பட்டேல் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், கேதர் ஜாதவ், சாஹல் மற்றும் பும்ப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

இந்தியா 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் சேஸிங் செய்ய உள்ளது.
Tags:    

Similar News