செய்திகள்

துணை கேப்டன் பதவி என்பது மிகப் பெரிய கவுரவம்: ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

Published On 2017-08-16 14:00 GMT   |   Update On 2017-08-16 14:00 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவி அளித்ததை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன் என ரோஹித்சர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பல்லேகலே:

இந்திய அணி, இலங்கையுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி, இலங்கை அணியை 3-0 என்ற கணக்கில்
ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.

இதற்கிடையே, இலங்கை அணியுடனான ஒரு நாள் போட்டி தொடரின் துணை கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமனம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலில், இந்திய அணியின் துணை கேப்டன் பதவி எனக்கு அளிக்கப்பட்டதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என மட்டுமே நினைத்தேன். ஆனால் துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டதை நினைத்து மிக மிக சந்தோஷமாக உணர்கிறேன்.

ஆகஸ்ட் 20 தேதி முதல் ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில், எனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன். அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது ஆசை. இதனால், அந்த போட்டியை மட்டுமே நினைத்து கொண்டிருக்கப் போவதில்லை. இப்போதைக்கு எனது மகிழ்ச்சியான இந்த தருணத்தை அனுபவித்து வருகிறேன்.

ஐ.பி.எல். மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகள் இரண்டும் வித்தியாசம் கொண்டவை. ஆனால், உணர்ச்சிகள் என்பது இரண்டு வகையான போட்டிகளிலும் ஒரே மாதிரியானது தான்.



கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். அதில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். பல்வேறு விதமான ஏற்ற இறக்கங்களில் இருந்து ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற வாய்ப்புக்காக நான் கடந்த 10 ஆண்டுகளாக காத்துக் கிடந்தேன்.  

கிரிக்கெட் விளையாட்டில் தினமும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டு வருகிறேன். இது இன்று நேற்றல்ல, எப்போது நான் ரஞ்சி டிராபியில் விளையாட ஆரம்பித்தேனோ, அப்போது முதலே கற்றுக் கொண்டு வருகிறேன்.

சாம்பியன் கோப்பையில் 320 ரன் என்ற இலக்கை விரட்டிப் பிடிப்பது என்பது எளிதான விஷயமில்லை. ஆனால், இலங்கை அணியினரின் போர்க்குணத்தால் அவர்கள் ஆட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டனர்.

ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இலங்கை அணி மிக நல்ல வலுவான அணி. ஆனால், நமது அணியின் பலத்தை நாம் நன்கு உணர்ந்துள்ளதால் இலங்கை அணிக்கு கடும் சவாலை கொடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News