செய்திகள்

வெளிநாட்டில் 7-வது வெற்றி: டோனியின் சாதனையை கோலி முறியடித்தார்

Published On 2017-08-15 08:54 GMT   |   Update On 2017-08-15 08:54 GMT
பல்லேகலே டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலமாக வெளிநாட்டு மண்ணில் 7 வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார் விராட் கோலி

பல்லேகலே:

பல்லேகலேயில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில்  இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது. ஏற்கனவே காலேயில் நடந்த முதல் டெஸ்டில் 304 ரன் வித்தியாசத்திலும், கொழும்பில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. ஒட்டு மொத்தத்தில் 5-வது முறையாக இந்திய அணி முழுமையாக டெஸ்ட் தொடரை வென்றது.



விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மைதானத்தில் 7-வது வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் டோனியின் சாதனையை கோலி முறியடித்தார். டோனி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் 6 வெற்றியை பெற்றுள்ளது.

கங்குலி வெளிநாட்டில் 11 வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 29 டெஸ்டில் 7 வெற்றியுடன் 2-வது இடத்திலும், டோனி 60 டெஸ்டில் 6 வெற்றியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.



கங்குலியின் சாதனையை முறியடிக்க கோலிக்கு வெளிநாட்டில் இன்னும் 5 டெஸ்ட் வெற்றி தேவை.

Tags:    

Similar News