செய்திகள்

காலே டெஸ்ட்டில் ஹர்திக் பாண்டியா அறிமுகம்: விராட் கோலி சூசக தகவல்

Published On 2017-07-25 14:21 GMT   |   Update On 2017-07-25 14:21 GMT
இலங்கைக்கு எதிராக நாளை காலேயில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியா அறிமுகமாவார் என்று கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி காலே மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் யாருக்கெல்லாம் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015-ல் காலே மைதானத்தில் இந்தியா ஐந்து பேட்ஸ்மேன்கள், ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இந்த போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதனால் 6 பேட்ஸ்மேன்கள், நான்கு பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது ஐந்து பேட்ஸ்மேன்கள், நான்கு பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் களம் இறக்கப்படலாம். நாளைய போட்டி குறித்து விராட் கோலி கூறுகையில், ஹர்திக் பாண்டியாவிற்கு இடம் கிடைக்கும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.



காலே டெஸ்ட் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘விக்கெட்டுக்களை வீழ்த்தும் ஹர்திக் பாண்டியா போன்ற சாமர்த்தியமான வீரர்களை நாங்கள் பெற்றுள்ளோம். முதல் டெஸ்ட்டில் அவர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அவர் அணியில் இடம்பிடித்தால் எங்களுக்கு பலத்தைக் கொடுக்கும்.

எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் எங்களுக்கு அதிக வாய்ப்பை கொடுத்துள்ளது. அதில் இருந்து ஏராளமாக நாங்கள் கற்றுள்ளோம். அதை காலே டெஸ்ட்டில் செய்வோம். அப்படி ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கும்போது முன்னணி பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்துவது முக்கியத்துவம் வாய்ந்தது.



லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இல்லாததால் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறக்கப்படமாட்டார். அவர் பரிசோதனையாக களம் இறக்குவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சிறப்பு வாய்ந்த தொடக்க வீரர்களை கொண்டுள்ளோம். அவர் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News