செய்திகள்

அடுத்தடுத்து இரண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பெடரர் 6-வது இடத்திற்கு முன்னேற்றம்

Published On 2017-03-21 10:20 GMT   |   Update On 2017-03-21 10:20 GMT
ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் இண்டியன் வெல்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார் ரோஜர் பெடரர்.
சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரராக திகழ்ந்து வருபவர் ரோஜர் பெடரர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றிருக்கும் பெடரருக்கு கடந்த வருடம் சிறந்ததாக அமையவில்லை. மேலும் காயம் காரணமாக சில மாதங்கள் களம் இறங்காமல் இருந்தார். இதனால் டென்னிஸ் தரவரிசையில் பின்னால் தள்ளப்பட்டார்.

இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில் ரபெல் நடாலை கடும்போராட்டத்திற்குப்பின் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று முன்தினம்) நடைபெற்ற இண்டியன் வெல்ஸ் தொடரில் சக நாட்டு வீரரான வாவ்ரிங்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் டென்னிஸ் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.



10-வது இடத்தில் இருந்த பெடரர், தற்போது 6-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, செர்பியாவின் ஜோகோவிச், வாவ்ரிங்கா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் அப்படியே நீடிக்கின்றனர்.

ஜப்பானின் நிஷிகோரி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். கனடாவின் மிலோஸ் ரயோனிக் 1 இடம் பின்தங்கி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். நடால் 7-வது இடத்தையும், டொமினிக் தியெம் 8-வது இடத்தையும், மரின் சிலிச் 9-வது இடத்தையும், டிசோங்கா 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

Similar News