செய்திகள்

எனது தந்தை ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் இருக்காது: முகமது சிராஜ்

Published On 2017-02-22 00:03 GMT   |   Update On 2017-02-22 00:03 GMT
30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி எனது தந்தை இனி ஆட்டோ ஓட்ட வேண்டிய தேவை இருக்காது என ஐதராபாத்தை சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் கூறினார்
ஐதராபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ஐதராபாத்தை சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் ரூ.2.6 கோடிக்கு விலை போனார். அவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மகிழ்ச்சி ததும்ப கூறியதாவது:-

ஏலத்தில் எடுக்கப்பட்டதும் அடுத்த 20 வினாடிகள் எனக்கு பேச்சே வரவில்லை. அதன் பிறகு எனது பெற்றோரை கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். எனக்கு அடித்திருக்கும் இந்த ஜாக்பாட்டை நினைக்கவே திரிலிங்காக இருக்கிறது. ஏதாவது ஒரு அணி என்னை வாங்கும் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு விலைக்கு போவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. எனது வாழ்க்கையில் இது மிகப்பெரிய தருணமாகும். எனது தந்தை முகமது கோஸ், 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நிச்சயமாக இனி அவர் ஆட்டோ ஓட்ட வேண்டிய தேவை இருக்காது. அவர் ஆட்டோ ஓட்டுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளமாட்டேன் என்கிறார். ஆனால் அவரை சமாதானப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். எங்களுக்காக நிறைய தியாகங்களை செய்துள்ள அவருக்கு இனி ஓய்வு தேவை. இப்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இந்த பணத்தை கொண்டு ஐதராபாத்தில் ஒரு நல்ல இடத்தில் எனது குடும்பத்துக்காக வீடு வாங்க விரும்புகிறேன்.

இவ்வாறு முகமது சிராஜ் கூறினார். 

Similar News