செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வில்லியம்ஸ் சகோதரிகளில் மகுடம் யாருக்கு?

Published On 2017-01-28 04:38 GMT   |   Update On 2017-01-28 04:38 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் சகோதரிகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதுகிறார்கள்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் சகோதரிகள் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், வீனஸ் வில்லியம்சும் மோதுகிறார்கள். இருவரும் இதற்கு முன்பு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் சந்தித்த 8 ஆட்டங்களில் 6-ல் செரீனாவே வென்று ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்.

அக்கா வீனசை விட தங்கை செரீனா தான் தற்போது வலுவான வீராங்கனையாக திகழ்கிறார். ஆனாலும் 36 வயதான வீனஸ் வில்லியம்சும் லேசுப்பட்டவர் அல்ல. தங்கைக்கு எதிராக எப்போதும் கடுமையாக மல்லுகட்டக் கூடியவர். அதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் 6 முறை சாம்பியனான செரீனா இந்த பட்டத்தை வென்றால், இது அவரது 23-வது கிராண்ட்ஸ்லாமாக அமையும். அதிக கிராண்ட்ஸ்லாம் ருசித்த வீராங்கனைகளின் பட்டியலில் ஜெர்மனியின் ஸ்டெபி கிராப்பை (22 பட்டம்) பின்னுக்கு தள்ளி விட்டு 2-வது இடத்தை பிடிப்பார்.

அத்துடன் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறுவார். தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள வீனஸ் வில்லியம்ஸ் வாகை சூடினால், முதல் ஆஸ்திரேலிய ஓபனாகவும், மொத்தத்தில் 8-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும் அவரது பெயருடன் இணையும். வெற்றி பெறும் வீராங்கனைக்கு ரூ.19 கோடியும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.9¾ கோடியும் பரிசாக வழங்கப்படும்.

Similar News