செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: ரயோனிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நடால்

Published On 2017-01-25 16:49 GMT   |   Update On 2017-01-25 16:49 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், உலகின் மூன்றாம் நிலை வீரரான ரயோனிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டம் ஒன்றில், 14 முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற ரபேல் நடால், கனடா வீரர் மிலோஸ் ரயோனிக்கை எதிர்கொண்டார். 2 மணி 44 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 6-4, 7-6 (9/7), 6-4 என்ற செட்கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம், நாளை மறுநாள் நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடால், பல்கேரிய வீரர் கிரிகோர் திமித்ரோவை எதிர்கொள்ள உள்ளார். இவர்கள் இருவரும் நேருக்கு நெர் 8 முறை மோதியுள்ளனர். இதில் 7 முறை நடால் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதியில் அவருக்கு பெரிய அளவில் நெருக்கடி இருக்காது என எதிர்பார்க்கலாம்.

30 வயதான நடால், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறுவது இது 24-வது முறையாகும். அதேசமயம் ஆஸ்திரேலிய ஓபனில் 5-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

‘இன்றைய ஆட்டத்தில் என்னை எதிர்த்து விளையாடிய மிலோஸ் மிகவும் கடினமாக விளையாடக்கூடியவர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பிரிஸ்பேனில் அவர் என்னை வீழ்த்தினார். எனவே, இன்றைய போட்டியில் கவனமாக விளையாட முடிவு செய்தேன்’ என்றார் நடால்.

Similar News