செய்திகள்

உலகக் கோப்பை வென்ற இந்திய கபடி வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம்: விளையாட்டுத்துறை மந்திரி அறிவிப்பு

Published On 2016-11-03 11:36 GMT   |   Update On 2016-11-03 11:36 GMT
உலகக் கோப்பையை வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை மந்திரி அறிவித்தார்.
புதுடெல்லி:

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கபடி போட்டியில் அனுப் குமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு டெல்லியில் உள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் வீட்டில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவிற்காக இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது வீரர்களின் திறமையை பாராட்டிப் பேசிய மந்திரி விஜய் கோயல், உலகக் கோப்பையை வென்ற கபடி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனித்தனியாக கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சேரலாதனும் இடம்பெற்றிருந்தார். அவர் இன்றைய பாராட்டு விழாவிற்குப் பிறகு பேசுகையில், ‘எனது ஓய்வுக்குப் பின் தமிழகம் முழுவதும் வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பேன். தமிழகத்தில் இருந்து நிறைய கபடி வீரர்கள் உருவாக வேண்டும்’ என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

Similar News