செய்திகள்

ஒலிம்பிக்கில் காயத்துடன் பங்கேற்ற ககன் நரங்: தோல்வி ஆய்வு அறிக்கையில் தகவல்

Published On 2016-10-06 04:13 GMT   |   Update On 2016-10-06 04:13 GMT
ஒலிம்பிக் போட்டியில் ககன் நரங் காயத்துடன் பங்கேற்றார் என்று தோல்வி ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி :

ரியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் 12 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை. 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இருந்து தொடர்ச்சியாக பதக்கம் வென்று வந்த இந்திய துப்பாக்கி சுடுதல் அணியினர் இந்த முறை பதக்கம் எதுவும் வெல்லாததால் அதிர்ச்சி அடைந்த தேசிய ரைபிள் சங்கம் ரியோ தோல்வி குறித்து ஆய்வு செய்ய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமையில் 4 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது.

அந்த கமிட்டி தனது 36 பக்க அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. அந்த அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் அம்சங்கள் குறித்து இந்திய ரைபிள் சங்க தலைவர் ரனிந்தர் சிங் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘ககன் நரங் குதிங்காலில் ஏற்பட்ட காயத்துடன் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்.

வீரர்களின் உடல் தகுதி, காயம் குறித்து நான் எல்லா வீரர்களிடமும் கேட்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தங்களது பிரச்சினை குறித்து எங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு வீரர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதனை ககன் நரங் செய்யவில்லை. வீரர்களை நாங்கள் சரியாக கண்காணிக்க தவறி விட்டோம்.

2012-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கம் வென்ற ககன் நரங் பயிற்சியாளரின் பயிற்சி அட்டவணையை சரியாக கடைப்பிடிக்கவில்லை. இது குறித்து பயிற்சியாளர் புகார் தெரிவித்தும் நாங்கள் நடவடிக்கை எடுக்க தவறி விட்டோம். தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்று இருக்கிறோம். வருங்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறோம். எங்களது கண்காணிப்பு முறையை வலுப்படுத்துவோம்’ என்று தெரிவித்தார்.

Similar News