செய்திகள்

வியட்நாமில் கபடி போட்டியில் தங்கம் வென்ற மதுரை மாணவிக்கு உற்சாக வரவேற்பு

Published On 2016-09-30 07:08 GMT   |   Update On 2016-09-30 07:09 GMT
வியட்நாமில் நடைபெற்ற கபடி போட்டியில் தங்கம் வென்று மதுரை வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை:

விழுப்புரம் மாவட்டம் சோழபாண்டியபுரத்தை சேர்ந்தவர் சவரியப்பன், பால் வியாபாரி. இவருடைய மகள் அந்தோணியம்மாள் (வயது23). இவர் மதுரை யாதவா கல்லூரியில் எம்.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே கபடி விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் மதுரை யாதவா கல்லூரியில் சேர்ந்த பின்னர் பயிற்சியாளர்கள் ஜனார்த்தனன், தேவா ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டார். அதன் மூலம் மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றார். சமீபத்தில் வியட்நாமில் நடந்த 5-வது ஏசியன் பீச் விளையாட்டில் கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க அந்தோணியம்மாள் தேர்வு செய்யப்பட்டார்.

அங்கு அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் அவருக்கு தங்க பதக்கம் கிடைத்தது. தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே மாணவி அவர் தான்.

தங்கம் வென்ற அவர் நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். அங்கு அவருக்கு கல்லூரி மாணவிகள், சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற மாரியப்பனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

தற்போது நானும் அவர் போல் தங்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. வருகிற உலக கோப்பை போட்டியில் பெண்கள் கபடி பிரிவில் தங்கம் வெல்வதே எனது லட்சியமாக கருதுகிறேன். அதற்கான பயிற்சிகளை செய்து வருகிறேன்.

நான் தினமும் 6 மணி நேரம் பயிற்சிகள் மேற்கொள்வேன். என் போன்ற மற்ற வீராங்கனைகளுக்கும் இதையே கூற விரும்புகிறேன். உலக கோப்பையில் தங்கம் வாங்க வேண்டும் என்ற லட்சித்திற்காக கூடுதல் நேரம் பயிற்சி செய்ய இருக்கிறேன். என் போன்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்க வேண்டும். அப்போது தான் வீரர்களுக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News