இந்தியா
மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யும் ஊழியர்.

நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை நடத்திய ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு

Published On 2022-07-19 05:16 GMT   |   Update On 2022-07-19 06:26 GMT
  • கொல்லம் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவிகளிடம் ஊழியர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்துள்ளனர்.
  • மேலும் பல மாணவிகளின் உள்ளாடைகளை களைந்தும் சோதனை நடத்தி உள்ளனர்.

திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த 17-ந்தேதி நடந்தது.

இந்த தேர்வினை 10 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த தேர்வில் மாணவிகளுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதில் கேரளா மாநிலம் கொல்லத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் தேர்வு கூட ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தது.

கொல்லம் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவிகளிடம் ஊழியர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்துள்ளனர். மேலும் பல மாணவிகளின் உள்ளாடைகளை களைந்தும் சோதனை நடத்தி உள்ளனர்.

இதனால் மாணவிகள் பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் வேதனை பட்டனர். சில மாணவிகள் இதுபற்றி கொல்லம் போலீசில் புகார் செய்தனர்.

கொல்லம் சூரநாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் அளித்துள்ள புகாரில் தேர்வுக்கு சென்ற என்னை அங்கிருந்தவர்கள் உள்ளாடை மற்றும் மேலாடையை கழற்ற கூறி சோதனை செய்தனர்.

என்னை போல பல மாணவிகளின் உள்ளாடைகளையும் கழற்றி சோதனை செய்தனர். கழற்றப்பட்ட உள்ளாடைகளை அங்குள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது என கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கேரள மாநில காங்கிரசார் மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இச்சம்பவத்தை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி முன்பும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி கல்லூரி நிர்வாகத்தினர் கூறும் போது, நீட் தேர்வு பாதுகாப்பை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். இதில் உடலில் உலோக பொருள்கள் இருந்தால் பீப் ஒலி எழுப்பும். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தில் அவர்கள் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்திருக்கலாம் என்றனர்.

கேரள மாணவிகளிடம் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்த விவகாரம் தொடர்பாக கேரள அரசு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதுபோல கேரள மகளிர் ஆணையமும் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News