இந்தியா

இஸ்ரேல் நாட்டிற்கு சென்று சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.20 கோடி சுருட்டிய கேரள தம்பதி

Published On 2022-08-26 04:57 GMT   |   Update On 2022-08-26 04:57 GMT
  • கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஒரு தம்பதி இஸ்ரேல் நாட்டில் வேலை செய்து வருகிறார்கள்.
  • தம்பதியரின் பேச்சு மற்றும் நடத்தையால் ஈர்க்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் அந்த தம்பதியிடம் சீட்டு சேர்ந்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஒரு தம்பதி இஸ்ரேல் நாட்டில் வேலை செய்து வருகிறார்கள்.

அங்கு பணிக்கு சென்ற அவர்கள் அக்கம் பக்கத்தில் வசித்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டனர். பின்னர் நமது ஊரில் உள்ளதை போல அங்கும் சீட்டு நடத்த தொடங்கினர்.

தம்பதியரின் பேச்சு மற்றும் நடத்தையால் ஈர்க்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் அந்த தம்பதியிடம் சீட்டு சேர்ந்தனர்.

சீட்டு தொடங்கிய போது அதற்கான பணத்தை சிலருக்கு வழங்கிய தம்பதி அதன்பின்பு பணம் கொடுக்க தாமதம் செய்தனர்.

இந்த நிலையில் அந்த தம்பதி திடீரென இஸ்ரேல் நாட்டில் இருந்து மாயமாகி விட்டனர். அப்போது தான் அந்த தம்பதி சுமார் ரூ.20 கோடி வரை சுருட்டியிருப்பது தெரியவந்தது.

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இஸ்ரேல் போலீசில் புகார் அளித்தனர். மேலும் சிலர் இந்தியா வந்து கேரள போலீசிலும் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தற்போது கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் இருந்து இஸ்ரேல் சென்று அங்கும் சீட்டு நடத்தி கேரள தம்பதி மோசடி செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News