இந்தியா

டெல்லி அருகே பல்கலைகழகத்தில் கல்லூரி மாணவியை சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலை

Published On 2023-05-19 05:39 GMT   |   Update On 2023-05-19 08:06 GMT
  • இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக காதலர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
  • கல்லூரி வளாகத்தில் சினேகா சவுராசியா வந்த போது அவரை அனுஜ் சிங், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் கான்பூரை சேர்ந்த 21 வயதான சினேகா சவுராசியா என்ற மாணவி பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் அனுஜ்சிங் என்ற மாணவரும் படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக காதலர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டீனில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் அனுஜ் சிங் ஆத்திரம் அடைந்துள்ளார். பின்னர் கல்லூரி வளாகத்தில் சினேகா சவுராசியா வந்த போது அவரை அனுஜ் சிங், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

நேராக விடுதிக்கு சென்ற அனுஜ் சிங் அங்கு தனது அறையில் வைத்து தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுகொண்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பல்கலை கழகத்தில் நேற்று முன்தினம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு மாணவர்களும் பல்கலை கழகத்தின் சிறப்பு அனுமதியை பெற்று விடுதி அறையில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கேண்டீனில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அனுஜ்சிங் , தனது காதலி சினேகாவுடன் பேசுவது போன்றும், பின்னர் அவர் ஒரு பரிசை கொடுப்பது போன்றும், அதனை சினேகா ஏற்க மறுப்பதும் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அனுஜ் சிங் காதலியின் வயிற்றில் சுட்டதும் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். பின்னர் அனுஜ் சிங் விடுதியை நோக்கி தப்பி ஓடுவது போன்று காட்சிகள் உள்ளது.

இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். அனுஜ் சிங்கிற்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? அவர் அதனை வளாகத்திற்குள் எப்படி கொண்டு வந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News