இந்தியா

எம்.பி. அடூர் பிரகாஷ்

காங்கிரஸ் எம்.பி. அடூர் பிரகாஷ் மீதான பாலியல் வழக்கை கைவிட்ட சி.பி.ஐ.

Published On 2022-11-28 04:06 GMT   |   Update On 2022-11-28 04:06 GMT
  • திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சி.பி.ஐ. ஒரு அறிக்கை தாக்கல் செய்தது.
  • அடூர் பிரகாஷ் மீது சரிதா நாயர் தெரிவித்த பாலியல் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

திருவனந்தபுரம்:

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் லட்சக்கணக்கில் பண மோசடி நடந்தது.

இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் தொழில் அதிபர் சரிதா நாயரை கைது செய்தனர். இந்த வழக்கில் அப்போதைய காங்கிரஸ் மந்திரிகள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கைதான சரிதா நாயர், அப்போதைய முதல்-மந்திரி உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் மீது பாலியல் புகார் கூறினார்.

இதையடுத்து பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு இந்த புகார் குறித்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் இந்த வழக்கை பல ஆண்டுகளாக விசாரித்து வந்தனர். இதில் இப்போதைய ஆற்றிங்கல் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. அடூர் பிரகாஷ் மீதான பாலியல் புகார் குறித்தும் சி.பி.ஐ. விசாரித்தது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சி.பி.ஐ. ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் அடூர் பிரகாஷ் மீது சரிதா நாயர் தெரிவித்த பாலியல் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை என கூறப்பட்டிருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கிலும் ஆதாரம் எதுவும் இல்லை என சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News