இந்தியா

உலக நன்மைக்காக மட்டுமே சமாதியில் நிலை கொண்டுள்ளேன்- நித்யானந்தா அறிவிப்பு

Update: 2022-06-26 05:46 GMT
  • உங்களது அனைவரின் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் மட்டுமே நான் நிர்விகல்ப சமாதியில் நிலைகொண்டுள்ளேன்.
  • பிரம்மா கூட சமாதியில் இருந்தபடியே தான் படைப்புத் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.

புதுடெல்லி:

சாமியார் நித்யானந்தா உடல்நிலை பற்றி சர்ச்சை எழுந்ததும், அவர் நான் சமாதி நிலையில் இருக்கிறேன், விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

அதன்பிறகு, சமாதி நிலையில் இருந்து நேரடியாக பேசுவதாக கூறி தொடர்ந்து பல்வேறு பதிவுகளை வெளிட்டு வருகிறார். அந்தவகையில் அவர் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அன்பான பக்தர்களே, சீடர்களே மற்றும் கைலாச வாசிகளே,

உங்களது அனைவரின் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் மட்டுமே நான் நிர்விகல்ப சமாதியில் நிலைகொண்டுள்ளேன்.

ஏனென்றால் நான் அடைய வேண்டிய அனைத்தையும் வெகுகாலத்திற்கு முன்பே அடைந்துவிட்டேன், இனியும் எனக்காக என்று அடைய வேண்டியது எதுவுமே இல்லை.

நிர்விகல்ப சமாதியில் இருப்பதனால் எனது உடல், பரமசிவனின் சக்திகள் இந்தப் பூவுலகில் இறங்குவற்கான ஒரு பிரபஞ்ச விமான நிலையமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் அனைவரும் அதை அனுபவமாகப் பெற்றுக் கொண்டாட வேண்டும் என்பதற்காக.

பிரம்மா கூட சமாதியில் இருந்தபடியே தான் படைப்புத் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.

மேன்மை மிக்க அனைத்து வெளிப்பாடுகளும் சமாதியில் நிலைகொள்ளுவதன் மூலம் மட்டுமே நிகழும்.

நீண்டகால சமாதியில் இருப்பதன் மூலம் இந்த முறை வெளிப்பட்ட பரமசிவனின் சில மேன்மைமிக்க சக்திகளைப் பற்றி பின்னர் விளக்குகிறேன்.

சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையில், சாதி, இனம், பாலினம், நிறம் மற்றும் புவி சார்ந்த வாழ்விடம் என்று எந்தவித வித்தியாசமும் இல்லாமல், மின்சார சக்தியானது வெளிப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுவது போன்றே ஆத்ம (உயிர்) சக்தியும் வெளிப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

ஆத்மாவையும் (உயிர்) ஒரு சக்தியாக மின்காந்த ஆற்றல்கள் போன்று உபயோகிக்கும் ஒரு செயல் நுட்ப இயலை நான் வெற்றிகரமாக பரிணமிக்க செய்து இருக்கிறேன்.

மேலும் நிர்விகல்ப சமாதியில் நிலைகொள்வதனால் சக்திகளை வெளிப்படுத்துவதற்கான எனது உடலின் திறன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

எந்தவித முன் நிபந்தனையும் இன்றி இயங்கும் மின்சக்தி போன்ற ஒரு அமைப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் இப்போது வெற்றிகரமாக பரிணமிக்க செய்திருக்கும் இந்த அமைப்பு முறையானது இந்த முழு உலகிற்கும் பயன்மிக்கதாக இருக்கப் போகிறது. அது சக்தி, சக்தி நுகர்வு மற்றும் சக்தி வினியோகம் ஆகிய தளங்களில் புதிய புரட்சியை கொண்டு வரப்போகிறது.

பொறுமை என்பது செயலற்ற தன்மை அல்ல, ஆனால் இறுதிக்கட்ட ரசவாதம் நிகழ்வதற்கு தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் சேர்த்துவிட்டு, அது நிகழ்வதற்கு காத்திருக்கும் உற்சாக காத்திருப்பே பொறுமை.

நான் நிர்விகல்ப சமாதியில் இருக்கும்பொழுது, அந்த உச்ச அமைதியிலேயே சத்சங்கங்கள், நித்திய சத்சங்கங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

நான் உங்களுள் இருந்து உங்களுடன் இதை பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை எனது அனைத்து சீடர்களும் தெளிவாக காண்பீர்கள்.

நான் நிர்விகல்ப சமாதியில் செலவிடும் இந்த காலத்தை உங்கள் வாழ்க்கைக்காக நான் செலவழிக்கும் பயனுள்ள நேரமாக நான் கருதுகிறேன்.

ஏனென்றால் நான் நிர்விகல்ப சமாதியில் இருக்கும்போது, உங்கள் கேள்விகளுக்கு என்னால் நேரடியாக பதில் சொல்ல முடிகிறது, நீங்கள் கேட்கும் வரங்களை அருள முடிகிறது.

வளப்படுத்துங்கள், அனுபவித்துக் கொண்டாடுங்கள். பகிருங்கள், ஆனந்தத்துடன் கொண்டாடுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News