இந்தியா

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு- கேரள வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்

Published On 2022-09-20 05:33 GMT   |   Update On 2022-09-20 05:33 GMT
  • கேரளாவை சேர்ந்த ஷைபு நிஹார் என்ற அபு மரியம் என்பவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதை மாநில அரசு கண்டுபிடித்தது.
  • மாநில போலீசார் ஷைபு நிஹார் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு சென்ற வாலிபர்கள் சிலர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததை உளவு துறை கண்டுபிடித்தது.

மேலும் கேரளாவை சேர்ந்த சிலர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுவதாகவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படியும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மாநில அரசு இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தியது. இதில் கேரளாவை சேர்ந்த ஷைபு நிஹார் என்ற அபு மரியம் என்பவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தது.

இது தொடர்பாக மாநில போலீசார், ஷைபு நிஹார் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு எடுத்து கொண்டது.

அவர்கள் நடத்திய விசாரணையில் ஷைபு நிஹார், வளைகுடா நாட்டில் பணிபுரிந்தபோது ஐ.எஸ். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு முயற்சி மேற்கொண்டது. இதில் அவர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணை முடிந்தது. இதையடுத்து ஷைபு நிஹார், குற்றவாளி என அறிவித்த கோர்ட்டு, அவருக்கான தண்டனை விபரத்தை 19-ந் தேதி அறிவிப்பதாக தெரிவித்து இருந்தது.

அதன்படி நேற்று ஷைபு நிஹாருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News