இந்தியா

மக்களவை தேர்தலுக்கு தயாராகும் என்.டி.ஏ.: இன்றுமுதல் கூட்டணி எம்.பி.க்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Published On 2023-07-31 01:41 GMT   |   Update On 2023-07-31 01:41 GMT
  • கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 10 குழுக்களாக பிரிப்பு
  • பிரதமர் மோடி இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரண்டு குழுக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு குறைவான காலமே உள்ளதால் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை பகுதி வாரியாக 10 குழுக்களாக பிரித்து பிரதமர் சந்திக்க முடிவு செய்தார். 10 குழுக்களாக எம்.பி.க்களை பிரிக்க பா.ஜனதா தலைவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது 10 குழுக்களாக எம்.பி.க்கள் பிரிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை இந்த சநதிப்பு நடைபெற இருக்கிறது.

மேற்கு உத்தர பிரதேசம், பண்டேல்கண்ட், பிரிஜ் பகுதி எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

2-வது ஆலோசனை கூட்டம் 7 மணிக்கு நடக்கிறது. இதில் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநில எம்.பி.க்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத், ஜே.பி. நட்டா ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி நிகழ்ச்சிக்கு புபேந்திர யாதவ், சர்பானந்த சோனாவால், தருண் கக், ருத்துராஜ் ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள். பிரகலாத் பட்டேல், அர்ஜுன் ராம் மேக்வால், வி. முரளீதரன் ஆகியோர் அவர்களுக்கு துணையாக இருப்பார்கள்.

பாராளுமன்றத்தை தவிர்த்து உத்தர பிரதேசம், மற்றும் மகாராஷ்டிரா மாநில தலைநகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. பாராளுமன்ற மக்களவை தேர்தலில் 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா கூட்டணி அதற்கான வேலைகளை செய்வதில் மும்முரமாக களம் இறங்கியுள்ளது.

பா.ஜனதா தலைமை 160 இடங்களை பலவீனமாக கருதுகிறது. இந்த இடங்களில் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு எதிராக பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டததை டெல்லியில் கூட்டியது. இதில் 38 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்

Tags:    

Similar News