search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய ஜனநாயக கூட்டணி"

    • தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • ரோடு ஷோ நடத்திய அமித் ஷா பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

    கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    இதற்காக பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா வாக்காளர்களிடம் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு ஷோவில் அமித் ஷாவுடன் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா மற்றும் பெங்களூரு தெற்கு பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ரோடு ஷோவை தொடர்ந்து பொது மக்களிடையே உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை வாக்காளர்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். முதல்வர் சித்தராமையா சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி பொது மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்."

    "கர்நாடகா மாநிலத்தின் 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பாராட்டத்தக்க ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை நிராகரித்து வளர்ச்சி சார்ந்த பிரதமர் மோடியின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது.
    • 'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களில் கூட வெற்றி பெறாது.

    இது தொடர்பாக, நாடு முழுவதிலும் இருந்து எனக்கு தகவல்கள் வருகின்றன.

    எங்கேயும் 'மோடி அலை' இல்லை. பாஜகவும் இதை அறிந்துள்ளது. அதனால்தான் '400க்கு மேல்' என உளவியல் ரீதியாக போலி தோற்றத்தை உண்டாக்க முயற்சித்து வருகின்றனர்.

    'இந்தியா' கூட்டணி நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் வெற்றி.
    • இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது- ஜெய்ராம் ரமேஷ்.

    மக்களவை தேர்தலில் 400 தொகுதிகள் இலக்கு என்ற முழக்கத்துடன் பா.ஜனதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தில் குதித்துள்ளது. பா.ஜனதா கட்சி தலைவர்களும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    பா.ஜனதா கூட்டணியாக 400 தொகுதிகளை கைப்பற்றுவோம், தனியாக 370 தொகுதிகளை பிடிப்போம் எனத் தெரிவித்து வரும் நிலையில், 200 தொகுதிகளை தாண்டுவீர்களா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் 400 முழக்கம் எதார்த்தத்தின் நேர் எதிர் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எடுத்துக்காட்டுடன் கிண்டல் செய்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பா.ஜனதா 543 தொகுதிகளில் கூட்டணியாக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் ராஜிவ் காந்தி தலைமையில் 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது. 2017 குஜராத் தேர்தலின்போது பா.ஜனதா 150 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 99 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2018-ல் சத்தீஸ்கர் தேர்தலின்போது 50 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 15 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2019 ஜார்கண்ட் தேர்தலின்போது 65 இடங்களை கைப்பற்றுவோம் என முழக்கமிட்டது. ஆனால் 25 இடங்களில்தான் வெற்றி பெற்றது.

    2020 டெல்லி மாநில தேர்தலில் 45 இடங்களை வெல்வோம் என முழக்கப்பட்டது. ஆனால் 8 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2021 தமிழ்நாடு தேர்தலில் 118 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 4 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இலக்கு, வெல்வோம் என முழக்கமிடுவது எளிது. ஆனால் எதார்த்தம் நேர் எதிராக உள்ளது.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும், தனியாக பா.ஜனதா 370 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூறி வருகிறது.

    2019 தேர்தலின்பேது 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தது. தற்போது அதை 400 ஆக உயர்த்தியுள்ளது.

    2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது, கூட்டணி கட்சிகளுடன் சேர்த்த 353 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
    • இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார்.

    பீகார் மாநிலம் ஜமுய்-ல் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார். இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார். நாட்டிற்காகவும் பணியாற்றியுள்ளார். எங்களுடைய பதவி காலத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    தவறுதலாக கூட எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், மீண்டும் அந்த கலவரங்கள் தொடங்கிவிடும் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    பிரதமர் மோடி பேசும்போது "முழு அக்கறையுடன் ராம் விலாஸ் பஸ்வானின் சிந்தனைகளை என்னுடைய இளைய சகோதரர் முன்னெடுத்துச் செல்வதில் முழு திருப்தி அடைகிறேன். ஒட்டுமொத்த நாட்டிற்கும் பீகார் வழிகாட்டியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு 5-6 பீகார் தலைமுறையினருக்கு நீதி கிடைக்கவில்லை" என்றார்.

    • வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல் இது என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், தற்போது நடக்கவிருப்பது இந்திய நாட்டின் பிரதமருக்கான தேர்தல். பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிற பிரதமர் மோடியை மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டிய தேர்தல். அதனால் நம்மை தமிழகத்தில் வாட்டி வதைக்கும் சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விடுங்கள். கல்வி தெய்வமாம் சரஸ்வதி வீற்றிருக்கும் தாமரை சின்னத்தில் வாக்களித்து தம்மை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து கிருஷ்ணாபுரம் பகுதியில் பரப்புரை செய்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா காலம் தவிர்த்து மீதமிருந்த 3 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியாக அளிக்கப்பட்ட 17 கோடி ரூபாயை வகுப்பறைகள், சமூகக் கூடங்கள், நியாயவிலைக் கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கணினி வகுப்பறைகள் உள்ளிட்டவற்றை கட்டிக்கொடுத்து ஒரு பைசா மீதம் வைக்காமல் மக்களுக்காக செலவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    தனது சொந்த நிதியாக 118 கோடி ரூபாய் இலவச உயர்கல்வி திட்டத்திற்காக செலவு செய்துள்ளேன். இதன்மூலம் ஏழை மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என கூறினார். தனது சாதனைகளை வேறு எந்த ஒரு அரசியல் தலைவரும், வேறு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியிடாத வகையில் தான் புத்தகமாக வெளியிட்டு பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறேன் என்றார்.

    பெரம்பலூர் மாவட்டம் மட்டுமன்றி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள உள்ளூர் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    இதனைத் தொடர்ந்து கை.களத்தூரில் பரப்புரை மேற்கொண்ட பாரிவேந்தர், நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த தரமான எம்.பி.யை தேர்ந்தெடுக்க வேண்டும். தம்மை எம்.பியாக தேர்ந்தெடுத்தால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 1,500 குடும்பங்களுக்கு கட்டணமில்லா உயர்தர இலவச மருத்துவம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக அதிகரிக்கவும், கை.களத்தூர் பஞ்சாயத்தை பேரூராட்சியாக மாற்றவும், தீயணைப்பு நிலையம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவற்றை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    • பெரம்பலூரின் பூலாம்பாடி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
    • கல்லாற்றில் தடுப்பணை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பூலாம்பாடி கிராமத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    வரும் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக ரெயில்வே திட்டம் நிறைவேற்றப்படும். தொடர்ந்து 1,200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி திட்டம் தொடரும். 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளித்தார்.

    கல்லாற்றில் தடுப்பணை, அரசு ஜவ்வரிசி ஆலை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓ.பி.எஸ் அணி மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், அ.ம.மு.க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், பா.ம.க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், த.மா.கா. மாவட்ட தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், த.ம.மு .க வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் புரட்சி முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஐஜேகே மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அரும்பாவூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், தன்னை தேர்ந்தெடுத்தால் யாரும் முடிக்காத 50 ஆண்டு கால கனவு திட்டமான ரெயில்வே திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். பொதுமக்கள் நல்ல பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கிருஷ்ணாபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் கல்விக்கான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரைக்கு வாக்களியுங்கள். சுட்டெரிக்கும் சூரியனை மறந்துவிடுங்கள். கிருஷ்ணாபுரத்தில் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்.

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரம் வருமாறு:-

    பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ.3 கோடியே 7 லட்சத்து 460. மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 22 லட்சம். கடன் ரூ.6.94 கோடி.

    மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ.8.99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ.1.58 கோடி.

    நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை. கடன் ரூ.1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230. அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம். வீட்டு கடன் ரூ.28 லட்சம்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு அசையும் சொத்தாக ரூ.2.86 லட்சம், தனி நபர் கடன் ரூ.40 ஆயிரம் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.
    • சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியின் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நியாயமானதாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பாக்கிறார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், அரசியல் கட்சிகளிடையே பாரபட்சம் கூடாது, சமூக வலைத்தளங்களில் பொய்ப்பிரச்சாரம் கூடாது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல விதிமுறைகளை வெளியிட்டு அறிவித்திருப்பதால் அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணில் அங்கம் வகித்துள்ள த.மா.கா.வானது கூட்டணில் உள்ள அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மக்களை நேரிடையாக சந்தித்து, வாக்குறுதிகள் கொடுத்து, ஓட்டு கேட்டு, மீண்டும் மத்தியில் பா.ஜ.க ஆட்சியானது பிரதமர் மோடி தலைமையில் அமைய பாடுபடும். நாடு முழுவதற்குமான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் தகுதி உள்ளவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும் என்பதற்கு ஏதுவாக விழிப்புணர்வுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என த.மா.கா எதிர்பார்க்கிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப, எந்த ஒரு முறைகேட்டிற்கும் இடம் இல்லாத வகையில், முறையாக நடத்தி, முடிவினை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக 6 தொகுதிகள்தான் தருவோம் என்கிறது பா.ஜனதா.
    • சிராக் பஸ்வானுக்கு 8 தொகுதிகளுடன், உ.பி.யில் 2 தொகுதிகள் கொடுக்க முன்வரும் இந்தியா கூட்டணி.

    பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணில் நிதிஷ் குமார் கட்சி, மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம் பிடித்திருந்தன. 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியிருந்தது.

    இந்த முறையும் இதே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த பிறகு, அந்த கட்சியில் இருந்து பிரிந்து பசுபதி பராஸ் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

    2019-ல் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆறு இடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வாக் அதே ஆறு தொகுதிகளை கேட்கிறார். அதேவேளையில் பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக ஆறு தொகுதிகள் தருகிறோம். லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சிக்கு தனியாக ஆறு இடங்கள் தர முடியாது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இதனால் கூட்டணி அமைவதில் இழுபறி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை இணைந்து, கடந்த முறை லோக் ஜன சக்தி போட்டியிட்ட அதே ஆறு இடங்களை தருகிறோம். மேலும் கூடுதலாக இரண்டு தொகுதிகள் வழங்குகிறோம். அத்துடன் உத்தர பிரதேசத்தில் இரண்டு இடங்கள் தருகிறோம் எனத் தெரிவித்து, சிராக் பஸ்வானை இந்தியா கூட்டணிக்கு இழுக்க காய் நகர்த்தி வருகிறது.

    பசுபதி பராஸ்க்கு பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. அரசில் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும், சிராஜ் பஸ்வான் ஐக்கிய ஜனதா தளம் மற்றம் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும், பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசவில்லை. அவர் ஏற்கனவே பிரதமர் மோடியை ராமர் என்றும், தன்னை ஹனுமான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    2020-ல் பா.ஜனதா உடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிராக் பஸ்வான் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார்.

    மேலும் சிராக் பஸ்வான்- பசுபதி பராஸ் இடையே ஹஜிபுர் தொகுதியை பெறுவதில் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆக மொத்தத்தில் பா.ஜனதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிராக் பஸ்வான் இந்தியா கூட்டணி வந்தால் அது சாதகமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

    • இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
    • நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரூ.21,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றுப் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதல் மந்திரியாக பதவி வகிக்கும் நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிதிஷ்குமார் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ்குமாருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த முறை தான் இருக்கும் இடத்திலேயே இருப்பேன் என்றார். குறைந்தபட்சம் இந்த முறையாவது அவர் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

    • பீகாரில் பிரதமர் மோடி ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது என்றார்.

    பாட்னா:

    பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் பீகாரில் வாரிசு அரசியல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    ஒரு காலத்தில் பீகார் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் பீகார் மாறியுள்ளது.

    சமீபத்தில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இது ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே கிடைத்த கவுரவம்.

    பீகாரில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது. ஏழைகள் முன்னேறும் போது தான், மாநிலம் வளர்ச்சி அடையும்.

    இங்கிருந்து வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு மக்கள் செல்லும் நிலை இருந்தது. அந்த நிலை மாறி உள்ளது. அது மீண்டும் வந்துவிடக் கூடாது.

    வாரிசு அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

    • தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
    • இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

    இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×