என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் சட்டசபை தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்- அமித் ஷா
    X

    பீகார் சட்டசபை தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்- அமித் ஷா

    • வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மீதி உள்ள 122 இடங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டின் மிகவும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் பீகாரும் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில் பீகார் அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் கண்டிருக்கிறார்கள்.

    லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோர் பீகாரை பின்னோக்கி இழுத்து சென்றனர். ஆனால் இன்று அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்று இளைஞர்கள் கூறி வருகின்றனர்.

    இதுவே முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று அவர்கள் கூறுவார்கள். கங்கை நதியின் கீழ் 4 பாலங்களை கட்டினோம். இன்னும் 10 பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. இது சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை.

    கடந்த ஆட்சியில் விவாதங்கள், கொள்ளை, கொலை, வழிப்பறி பற்றியதாக இருந்தது. ஆனால் இன்று விவாதங்கள் முன்னேற்றம் பற்றி மாறியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.

    நாங்கள் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் செல்வதை பல முறை தெளிவுப்படுத்தினோம். அவரே முதலமைச்சர் ஆவார். வெற்றிக்கு பிறகு அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுவோம். எங்கள் பலத்தை பற்றி நினைக்காமல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதே பா.ஜ.க.,-வின் கொள்கை.

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2 கோடிக்கும் அதிகமான வேலை கொடுக்க வேண்டுமானால் பி, சி, டி பிரிவுகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    அதற்கு சராசரியாக ரூ.39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும் மொத்தம் ரூ.12.85 லட்சம் கோடி தேவை. இது பீகாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகமாகும். சாத்தியமில்லாத இந்த வாக்குறுதியை தேஜஸ்விக்கு ராகுலும், லாலுவுதான் அளித்திருப்பார்கள்.

    புலம்பெயர்வு குறைய பீகாரிலேயே சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டு ராஜ்ஜியம் திரும்பும். எனவே மக்கள் வாக்களிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×