என் மலர்tooltip icon

    இந்தியா

    எத்தனை வேட்பாளர்களை விலைக்கு வாங்கினாலும் கடுமையாக போராடுவோம்: NDA-வுக்கு பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை
    X

    எத்தனை வேட்பாளர்களை விலைக்கு வாங்கினாலும் கடுமையாக போராடுவோம்: NDA-வுக்கு பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

    • 3 தொகுதியில் பிரசாந்த் கிஷோர் கட்சி வேட்பாளர்கள் வாபஸ்.
    • பீகாரில் என்டிஏ-வை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம்.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது.

    அந்த கட்சியின் மூன்று வேட்பாளர்கள் திடீரென தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர கூறியதாவது:-

    கடந்த சில வருடங்களாக யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், பாஜக-தான் ஆட்சி அமைக்கும் என்ற பிம்பத்தை பாஜக உருவாக்கியுள்ளது. ஜன் சுராஜ் வெறும் வாக்கை பிரிக்கம் கட்சி, எங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை என்று கூறிய கட்சியின் நிலையைப் பாருங்கள். வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அச்சத்தில் உள்ளது.

    மக்களை பயமுறுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்தும் லாலு கட்சி கூட்டணிக்கு அவர்கள் பயப்படுவதில்லை. மக்களுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால், லாலு யாதவின் 'காட்டு ராஜ்ஜியம்' மீண்டும் வரும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த முறை, மக்களுக்கு ஒரு புதிய வழி இருக்கிறது, அது ஜன் சுராஜ்.

    லாலுவின் பயத்தால் மக்கள் பாஜகவிற்கும் நிதிஷ் குமாருக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாஜகவின் பயத்தால் லாலு ஜிக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த 30 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி ஜன் சுராஜ்தான்.

    தனபூர், பிரஹாம்பூர், கோபால்கஞ்ச்ஆகிய தொகுதிகளில் வலுக்கட்டாயமாக ஜன் சுராஜ் வேட்பாளர்கள் வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர். ஜன் சுராஜ் தலைவர்கள் ஓடிப்போகிறார்களா அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறதா என்பதை பீகார் தெரிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் வெளிப்படையாக மிரட்டப்படுகிறார்கள்..

    எங்கள் கட்சியில் 240 வீரர்கள் இன்னும் களத்தில் உள்ளனர். அவர்கள் NDA-வை வேரறுக்கும் வரை ஓய மாட்டார்கள். நவம்பர் 14 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று எல்லாம் தெளிவாகிவிடும். பிரசாந்த் கிஷோரும் அவரது ஜன் சுராஜ் கூட்டாளிகளும் பயப்படப் போவதில்லை. நீங்கள் எத்தனை வேட்பாளர்களை வாங்கினாலும், அச்சுறுத்தினாலும் அல்லது கட்டுப்படுத்தினாலும் தேர்தலில் வலுவாகப் போராடும்.

    இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×