இந்தியா

மந்திரிகள் தங்களது பிள்ளைகளை ராணுவத்தில் சேர்க்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்

Published On 2022-06-20 02:26 GMT   |   Update On 2022-06-20 02:26 GMT
  • பிரதமர் மோடி பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பதிலளிக்க வேண்டும்.
  • அக்னிபாத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

பெங்களூரு :

கா்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

"மாணவர்கள் பயங்கரவாதிகளா? பாடத்திட்டங்களை திருத்தியதற்கு எதிராக மடாதிபதிகள் குரல் கொடுக்க வேண்டும். அரசு ஒன்றும் செய்ய முடியாது. புத்தர், பசவண்ணர், குவெம்பு அம்பேத்கர், நாராயணகுரு ஆகிய மகான்களுக்கு அநியாயம் ஏற்பட்டுள்ளது. மறைந்த சிவக்குமார சுவாமி, பாலகங்காதரநாத சுவாமி உள்ளிட்டோருக்கு அவமானம் ஏற்படும்போது, லிங்காயத், ஒக்கலிகர் சங்கங்கள் குரல் எழுப்ப வேண்டும். ஆனால் அந்த சங்கங்கள் மவுனமாக உள்ளன.

பிரதமர் மோடி கர்நாடகம் வருகிறார். மைசூருவில் நடைபெறும் யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார். இதனால் அவர் செல்லும் பாதையில் உள்ள கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்கள் பயங்கரவாதிகளா? கர்நாடக மாணவர்களிடம் வன்முறை கலாச்சாரம் கிடையாது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் 17 வயது இளம் இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு வீரர்களாக பயன்படுத்தி கொண்டு பின்னர் வெளியே அனுப்புகிறார்கள்.

அவர்கள் காவலாளிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமா? இது ராணுவத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானம். இதை நியாயப்படுத்தும் மந்திரிகள் தங்களின் குழந்தைகளை ராணுவத்தில் சேர்ப்பார்களா? அவர்களின் குழந்தைகள் டாக்டர்கள், என்ஜினீயர்கள் ஆக வேண்டும். ஏழைகளின் குழந்தைகள் காவலாளிகள் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டுமா? இந்த அக்னிபாத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இளைஞர்கள் நமது பலம். கர்நாடகம் வரும் பிரதமர் மோடி பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷன் குறித்து பதிலளிக்க வேண்டும்."

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

Similar News