இந்தியா
எம்எல்ஏ பதவியேற்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்

Published On 2022-03-21 10:18 GMT   |   Update On 2022-03-21 10:18 GMT
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, காதிமா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் தோல்வியடைந்தார்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகளில் 47 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் 19 இடங்களை பெற்று 2- வது இடத்தை பிடித்துள்ளது. 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். டேராடூனில் உள்ள விதான் சபாவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பன்சிதர் பகத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று மாலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று உத்தரகாண்ட் மாநில பா.ஜனதா தலைவர் மதன் கவுசிக் தெரிவித்துள்ளார்.

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி மீனாட்சி லேகி ஆகியோர் நாளை (22-ந்தேதி) டேராடூனில் நடைபெறும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். அந்த கூட்டத்துக்கு பிறகு முதல்- மந்திரி பதவி ஏற்பார் என்று செய்தி தொடர்பாளர் மன்வீர் சவுகான் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி திரிவேந்திரசிங் ராவத் கூறுகையில், முதல்-மந்திரி பதவிக்கு பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் முதல்- மந்திரியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, காதிமா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் கடந்த 11-ந் தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசு பதவி ஏற்கும் வரை அவர் தற்காலிக முதல்வராக இருப்பார்.
Tags:    

Similar News