இந்தியா
குமாரசாமி

மதசார்பற்ற ஜனதா தள கட்சியை யாரும் அசைக்க முடியாது: குமாரசாமி

Published On 2022-01-29 03:15 GMT   |   Update On 2022-01-29 03:15 GMT
மேகதாது பாதயாத்திரையால் ராமநகர் மாவட்டத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டை உடைந்துவிடும் என்று காங்கிரசார் கனவு காண்கிறார்கள்.
பெங்களூரு

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் ெசன்னபட்டணாவில் நேற்று புதிதாக மின் வயர்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டி.கே.சகோதரர்கள் (டி.கே. சிவக்குமார்-டி.கே.சுரேஷ்) என்னை ராமநகரில் இருந்து விரட்டியடிக்க உள்ளார்களாம். என்னை அவர்களால் விரட்டியடிக்க முடியுமா? என்று எனக்கு தெரியாது. ராமநகருக்கும், எனக்கும் இடையே உள்ள உறவு குறித்து ஆயிரம் முறை கூறியுள்ளேன். எனக்கும், இந்த மாவட்டத்திற்கும் தாய்-மகன் உறவு உள்ளது. பணம், படை பலம் மூலம் குமாரசாமியை அடக்க முடியாது. மேகதாது பாதயாத்திரையால் ராமநகர் மாவட்டத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டை உடைந்துவிடும் என்று காங்கிரசார் கனவு காண்கிறார்கள்.

இன்னும் 10 பாதயாத்திரை நடத்தினாலும் எங்கள் கட்சியை அசைக்கமுடியாது. வேறெதுவும் செய்ய முடியாது. ராமநகர் மக்களின் மனங்களில் இடம் பெறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அன்பு, நம்பிக்கை, உழைப்பு இருந்தால் மட்டுமே இந்த மக்களை கவர முடியும். இங்கு பணத்திற்கு மதிப்பு இல்லை. எங்கள் கட்சியை சேர்ந்த சி.எஸ்.புட்டராஜூ எம்.எல்.ஏ. சித்தராமையாவை சந்தித்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

யார்-யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு கட்சி, தொண்டர்கள் தான் முக்கியம். தொண்டர்களால் தான் எங்கள் கட்சி உள்ளது. எங்கள் கட்சியில் பலர் வளர்ந்து பின்னர் வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் பலம் என்ன என்பது தெரியவரும்.

காங்கிரசை சேர்ந்த சி.எம்.இப்ராகிம் எம்.எல்.சி. ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேருவதாக கூறியுள்ளார். அவரை நான் வரவேற்கிறேன். பசவராஜ் பொம்மை ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. இந்த 6 மாதங்களில் கர்நாடகத்தில் அரசு இருந்தது என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. அடுத்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி வைத்து கொள்ளாது. 123 தொகுதிகளில் வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். கொரோனா பரவல் முடிந்த பிறகு அடுத்த ஓராண்டு சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வேன். ஜனதா தளம் (எஸ்) கட்சி அவ்வளவு தான் முடிந்துவிட்டது என்று சொல்கிறவர்களுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News