இந்தியா
பாஜக

மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதி: பாஜக கடும் எதிர்ப்பு

Published On 2022-01-29 02:25 GMT   |   Update On 2022-01-29 02:25 GMT
மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் 100 சதுர மீட்டர், அதற்கு மேல் உள்ள வாக்-இன் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிரா சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட சிலவகை கடைகளில் ஒயின் விற்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் 100 சதுர மீட்டர், அதற்கு மேல் உள்ள வாக்-இன் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் வழிப்பாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகளில் ஒயின் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி நவாப் மாலிக் கூறினார்.

ஆனால் மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "மகாராஷ்டிராவை மது மாநிலமாக மாற்ற நாங்கள் விடமாட்டோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலத்தில் மாநில அரசு பொதுமக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் மதுவை ஊக்கப்படுத்துவது அரசுக்கு முக்கியத்துவமாக உள்ளது" என்றார்.

மேலும் கோலாபபூரில் நேற்று அந்த மாவட்ட பா.ஜனதா தலைவர் ராகுல் சிக்கோடே தலைமையில் தொண்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காலி ஒயின் பாட்டில்களை கையில் வைத்து கொண்டு அவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News