இந்தியா
துப்பாக்கியுடன் செல்லும் அமைச்சரின் மகன்

சிறுவர்களை மிரட்ட துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க மந்திரியின் மகன்- பீகாரில் பரபரப்பு

Published On 2022-01-24 05:35 GMT   |   Update On 2022-01-24 05:40 GMT
ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மந்திரியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.
சம்பரன்:

பீகாரில் சுற்றுலாத்துறை மந்திரி நாராயாண் பிரசாத்தின் மகன், நிலத்தில் விளையாடிய சிறுவர்களை விரட்டுவதற்காக துப்பாக்கியை எடுத்து வந்து சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்டியா கிராமத்தில், பா.ஜ.கவை சேர்ந்த அம்மாநில மந்திரி நாராயண் பிரசாத்துக்கு சொந்தமான நிலத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த மந்திரியின் மகன் பப்லு குமார் அவர்களிடம் கடுமையாக பேசியுள்ளார்.  

அப்போது பப்லு குமாருக்கும், சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவர்களை பயமுறுத்துவதற்காக துப்பாக்கியை எடுத்து வந்து சிறுவர்களை தாக்கியுள்ளார். மேலும் சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.



இச்சம்பவத்தில் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், மந்திரியின் வீட்டுக்கு சென்று, அவரது காரை அடித்து நொறுக்கினர். மேலும் பப்லுவையும் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மந்திரி நாராயண் பிரசாத் கூறியதாவது:-

எனது நிலத்தை அபகரிக்க கிராம மக்கள் முயன்றனர். எனது குடும்பத்தினரை தாக்கினர். அதை தடுப்பதற்காகவே, எனது மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அவரையும் பொதுமக்கள் கற்களால் தாக்கினர். எனது வாகனத்தையும் சேதப்படுத்தினர். 

இவ்வாறு நாராயண் பிரசாத் கூறினார்.

இந்த சம்பவத்துக்கு எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் சக்தி சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  'பீகாரில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறுகின்றனர். கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளை தாக்க மந்திரியின் மகனுக்கு யார் உரிமை தந்தது? சட்டத்தை இயற்றுபவர்கள் சட்டத்தை மீறும் போது மாநிலத்தில் யார் சட்டத்தை அமல்படுத்துவார்கள்' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News