இந்தியா
உச்சநீதிமன்றம்

வேட்பாளரின் குற்ற பின்னணியை வெளியிட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் - விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

Published On 2022-01-18 07:32 GMT   |   Update On 2022-01-18 07:32 GMT
ஒவ்வொரு அரசியல் கட்சியும் குற்ற வழக்குகள் உள்ள நபரை ஏன் விரும்புகிறது என்பதற்கு விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய்  பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர்  குறிப்பிட்டுள்ளதாவது:

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான சமாஜ்வாடி கட்சி, உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானா சட்டசபை தொகுதியில் வன்முறைக் கும்பல் தலைவர் நஹித் ஹசனை களமிறக்கியுள்ளது ஆனால் அவரது குற்றப் பதிவுகளை மின்னணு, அச்சு அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடவில்லை. அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.  11 மாதங்களுக்கு முன்பு  குண்டர் சட்டத்தின் கீழ் நஹித் ஹசன் காவலில் உள்ளார், மேலும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வேட்புமனுத் தாக்கல் செய்த முதல் வேட்பாளர் அவர் ஆவார் .  இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் நஹித் ஹசன். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. 

குற்றபின்னணி உள்ள வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் போது ஏராளமான சட்டவிரோத பணத்தை பயன்படுத்துகிறார்.  வாக்காளர்கள் அல்லது போட்டி வேட்பாளர்களை மிரட்டுகிறார். சட்டமன்ற உறுப்பினராக நுழைந்தவுடன், அரசாங்க இயந்திரத்தின் செயல்பாட்டில் தலையிட்டு செல்வாக்கு செலுத்துகிறார். சிலர் அமைச்சர்களாக மாறுகிறார்கள், இது நிலைமையை மோசமாக்குகிறது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குற்றப் பின்னணி கொண்ட சட்டசபை உறுப்பினர்கள் நீதி நிர்வாகத்தைத் தகர்க்க முயற்சிப்பதாகவும், தங்களுக்கு எதிரான வழக்குகளில் இருந்து விடுதலை பெற அவர்கள் முயற்சிப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் துணிச்சலாக மீறுகின்றனர். 

ஒவ்வொரு அரசியல் கட்சியும் குற்ற வழக்குகள் உள்ள நபரை ஏன் விரும்புகிறது மற்றும் குற்ற பின்னணி இல்லாத வேட்பாளரை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை விளக்குமாறும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

தற்போது நடைபெற்று வரும் தேர்தல் நடைமுறையை கருத்தில் கொண்டு  மனுவை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News