செய்திகள்
பசவராஜ் பொம்மை

மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி: பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

Published On 2021-10-04 02:08 GMT   |   Update On 2021-10-04 02:08 GMT
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதுடன், உபரி நீர் கிடைக்காமல் போகும் என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பெங்களூரு

கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய ஜல்சக்தி துறைக்கு அனுப்பிவைத்துள்ளது. மேலும் அனுமதி வழங்குமாறு கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுவதுடன், உபரி நீர் கிடைக்காமல் போகும் என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேகதாது திட்ட விவகாரத்தில் அணை கட்டியே தீருவோம் என்ற கர்நாடக அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

நாங்கள் மேற்கொண்டுள்ள சட்ட போராட்டத்திலும் எந்த மாற்றமும் இல்லை. அதனால் புதிய அணை கட்டுவது உறுதி.

காவிரி நீரை கொடுப்பது தமிழக அரசு அல்ல. அவர்களின் கையில் எதுவும் இல்லை. அதனால் அந்த மாநிலம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை.

தமிழக மக்களை திசை திருப்ப மேகதாது திட்டத்தை அந்த மாநில அரசு பயன்படுத்துகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Tags:    

Similar News