செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2021-09-23 03:53 GMT   |   Update On 2021-09-23 03:53 GMT
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளைக்கு கடந்த 25 ஆண்டுக்கான தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி:

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின் கடந்த 25 ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் இந்த தணிக்கையில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி அறக்கட்டளை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 17-ந்தேதி விசாரித்தது.

அப்போது பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர் தனது வாதத்தில், ‘கேரள ஐகோர்ட்டு, சிவில் கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அறக்கட்டளை இடம்பெறவில்லை. கோவிலில் நடைபெறும் பூஜை மற்றும் அரச குடும்பம் தொடர்புடைய சடங்குகளையும் கண்காணிக்கவே அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போதுதான் கோர்ட்டு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் அறக்கட்டளையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என தெரிவித்தபோதுதான் முதன் முதலில் அறக்கட்டளை இடம்பெறத் தொடங்கியது. எனவே திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையின கணக்குகளை தணிக்கை செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என வாதிட்டார்.

ஆனால் கோவில் நிர்வாகக் குழு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர் வசந்தி, ‘கோவில் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது, கோவிலுக்கு 60 முதல் 70 வட்சம் ரூபாய் காணிக்கை கிடைக்கிறது. இது மாதந்தோறும் ஆகும் 1.25 கோடி ரூபாய் செலவுகளை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை. எனவே கோவில், அறக்கட்டளையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கணக்கு தணிக்கை என்பது கோவிலுக்கானது மட்டுமல்ல, அறக்கட்டளையின் கணக்கையும் கருதிதான் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 13-ந்தேதி கூறிய தீர்ப்பில் தெரிவித்ததைப் போல, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளைக்கு கடந்த 25 ஆண்டுக்கான தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற முதலாவது கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியதாகும். கோவில், அறக்கட்டளையின் கணக்குகளை விரைவாக கூடுமான வரையில் 3 மாதங்களுக்குள் சிறப்பு தணிக்கை செய்ய உத்தரவிடுகிறோம்.

பத்மநாப சுவாமி கோவில் அறக்கட்டளையை சுதந்திரமான தனித்துவமான அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற 2-வது கோரிக்கையை பரிசீலிப்பதை உரிய கோர்ட்டின் முடிவுக்கு விட்டுவிடுகிறோம். இதில் எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News