செய்திகள்
நானா படோலே

பட்னாவிஸ் அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது: நானா படோலே

Published On 2021-09-21 02:43 GMT   |   Update On 2021-09-21 02:43 GMT
முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியுள்ளார்.
மும்பை :

பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா சமீபத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில மந்திரி ஹசன் முஷ்ரிப் மீது ஊழல் புகார் கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் சோலாப்பூர் மாவட்டத்தில் நுழைய அந்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் புனேயில் நேற்று அளித்த பேட்டியில், “மகா விகாஸ் அகாடி அரசு மந்திரிகள் ஊழலில் ஆழமானவர்கள். அவர்களின் குற்றங்களை கோர்ட்டில் அம்பலப்படுத்த முடியும் என்ற கவலை அவர்களுக்கு இல்லை.

சில நாட்களில் 2 காங்கிரஸ் தலைவர்கள் முறைகேடு விவரங்களை நாங்கள் வெளியிடுவோம்“ என அவர் கூறினார். இருப்பினும் இதில் அவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை.

இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அரசியல் விளையாட்டு மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்ட பா.ஜனதா ஆனந்த சதுர்த்தி தினத்தை தேர்வு செய்துள்ளது.

மகா விகாஸ் அகாடி கூட்டணி தனது முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும். மீண்டும் ஆட்சியை கைப்பற்றவேண்டும் என்ற பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது. காங்கிரஸ் மந்திரிகள் எந்த தவறும் செய்யாததால் பா.ஜனதாவின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பயப்பட தேவையில்லை. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. எவ்வாறு தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பது முழு நாட்டிற்கும் தெரியும். கிரித் சோமையாவின் பேச்சுகளை அவரது சொந்த கட்சியினர் கூட பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அரசின் ஊழலை வெளிக்கொண்டு வரும் நேரம் தற்போது வந்துவிட்டது. கிரித் சோமையா மராட்டியத்தை ஊழல் அற்ற மாநிலமாக மாற்ற விரும்பினால் அவர் பா.ஜனதா தலைவர்களின் தவறான செயல்களை அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே அவர் மக்களின் ஆதரவை பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News