செய்திகள்
திருப்பதியில் பேட்டரியால் இயங்கும் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சி.

திருப்பதியில் பேட்டரியில் இயங்கும் 35 கார்கள் அறிமுகம்

Published On 2021-08-31 05:10 GMT   |   Update On 2021-08-31 06:40 GMT
திருமலை மற்றும் மலைப்பாதையில் இனி இலவச பஸ்களுடன் அதிக அளவில் பேட்டரி கார்கள் மற்றும் பஸ்களை தேவஸ்தானம் இயக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி:

திருப்பதியில் இயற்கை வளத்தை பாதுகாக்க தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளது. திருமலையில் இயக்கப்படும் எரிபொருள் வாகனங்களால் காற்று மாசு அதிகரிப்பதாக தேவஸ்தானம் கணித்துள்ளது.

எனவே திருப்பதியில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி பேட்டரியால் இயங்கும் பஸ்கள் சோதனை முறையில் திருமலையில் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் பேட்டரியால் இயங்கும் 12 பஸ்களை இயக்கி வருகிறது.

இன்னும் 6 மாதத்தில் பேட்டரியால் இயங்கும் பஸ்களை தேவஸ்தானம் மேலும் அதிகரிக்க உள்ளது. மேலும் எளிய தவணை முறையில் பேட்டரியால் இயங்கும் கார்களை வாங்கி இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு பேட்டரியால் இயங்கும் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 35 கார்களை வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வாழை மரம் கட்டி, மாலை அணிவித்து பூஜைகள் செய்து கொடியசைத்து அதிகாரிகள் அறிமுகப்படுத்தினர்.

இந்த கார்களை தேவஸ்தானம் மாத தவணை முறையில் வாங்கி உள்ளது. மாதம் ஒன்றுக்கு ஒரு காருக்கு ரூ.33,600 செலுத்த வேண்டும். 5 ஆண்டுகள் தவணை செலுத்திய பின் கார்கள் தேவஸ்தானத்துக்கு சொந்தமாகும்.

தற்போது வாகன எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த கார்கள் 90 நிமிடத்துக்குள் சார்ஜ் செய்யப்படுகிறது. அதற்கு 30 யூனிட் மின்சாரம் தேவைக்கப்படுகிறது.

தற்போது ஆந்திராவில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.6.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஒரு கி.மீ. பயணிக்க 80 பைசா மட்டுமே செலவாகும்.

இனி திருமலை மற்றும் மலைப்பாதையில் இலவச பஸ்களுடன் அதிக அளவில் பேட்டரி கார்கள் மற்றும் பஸ்களை தேவஸ்தானம் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News