செய்திகள்
நைனிடால் நிலச்சரிவு

உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு- பேருந்தை நிறுத்தி பயணிகள் உயிரைக் காப்பாற்றிய டிரைவர்

Published On 2021-08-22 00:15 GMT   |   Update On 2021-08-22 02:47 GMT
உத்தரகாண்டில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவு பாதிப்பில் இருந்து தப்பியது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டேராடூன்:

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11-ம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் பேருந்து, லாரி மற்றும் 4 கார்கள் சிக்கியதில் அதில் பயணம் செய்தவர்களில் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. நிலச்சரிவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நைனிடால் பகுதியில் சாலையில் பேருந்து ஒன்று 14 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் சென்றது.

திடீரென மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் மண், கற்கள் இவற்றுடன் மரங்களும் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தன. இதையறிந்த பேருந்து ஓட்டுனர் உஷாராக வண்டியை முன்பே நிறுத்திவிட்டார்.

நிலச்சரிவை கண்ட பயணிகளில் இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியே வெளியே குதித்தும், சிலர் வாசல் வழியே வெளியேறியும் தப்பியோடினர். இதன்பின் பேருந்து பின்னோக்கி இயக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்குச் சென்றது.

ஒரு சில நிமிடங்கள் முன்னே சென்றிருந்தால் பேருந்து விபத்தில் சிக்கி பெருமளவு சேதம் ஏற்பட்டிருக்க கூடும். டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News