செய்திகள்
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை படத்தில் காணலாம்.

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

Published On 2021-07-23 07:27 GMT   |   Update On 2021-07-23 07:27 GMT
காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள்.

இதனால் பல்வேறு சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.

இதுவரை இல்லாத புது முயற்சியாக டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவதை தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த மாதம் 27-ந் தேதி ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் அதிகாலையில் 2 டிரோன்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து பறந்து வந்த இந்த டிரோன்களில் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தார்கள். அது கீழே விழுந்து வெடித்தது.

விமானப்படை ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டுகள் இரண்டுமே சக்தி குறைந்ததாக இருந்தது. எனவே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் நடத்தியது இதுவே முதல் முறை ஆகும்.

எனவே பெரிய தாக்குதல்களை நடத்துவதற்காக இது ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாக இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. எனவே பாதுகாப்புப் படை உஷார்படுத்தப்பட்டது.

சிறிய வகை டிரோன்கள் என்பதால் ரேடார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எளிதாக ஊடுருவியது. எனவே சிறிய டிரோன்கள் வந்தாலும் கண்டுபிடிக்கும் கருவிகளை பொருத்தும் பணிகள் நடந்தன.

கடந்த மாதம் நடந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் டிரோன்களை ஊடுருவ செய்து வருகிறார்கள். குறிப்பாக ஜம்மு பகுதியிலும், ஸ்ரீநகரிலும் அதிகளவில் டிரோன்கள் ஊடுருவி இருக்கின்றன.

எனவே அவை பறந்து வந்தால் சுட்டுவீழ்த்துவதற்கு எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை ஜம்முவில் உள்ள அக்னூர் பகுதியில் மர்ம டிரோன் ஒன்று பறந்து வந்தது. எல்லையில் இருந்து 8 கி.மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி வந்து பறந்து கொண்டு இருந்தது. உடனே பாதுகாப்பு படையினர் அதை நோக்கி சுட்டார்கள்.


இதில் ஒரு குண்டு டிரோனை தாக்கியது. உடனே டிரோன் கீழே விழுந்தது. அதை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தார்கள். டிரோனில் 5 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த குண்டு வெடித்து இருந்தால் பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும். சரியான நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதால் சதி முறியடிக்கப்பட்டது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை தகர்க்கும் வகையில் இந்த வெடிகுண்டை அனுப்பி இருக்கிறார்கள். ராணுவம் உஷாராக இருந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இந்த டிரோனையும் அவர்கள்தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே ஜம்மு விமானப் படை தளத்தில் தாக்குதல் நடத்திய டிரோன்களில் சிறிய அளவிலான வெடிகுண்டுகளே இருந்தன. ஆனால் இன்று வீழ்த்தப்பட்ட டிரோனில் 5 கிலோ அளவுக்கு அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து இருந்துள்ளது.

இந்த அளவுக்கு பெரிய வெடிகுண்டுகளை டிரோன்கள் மூலம் அனுப்ப முடியும் என்ற நிலை இருப்பதால், இது ஒரு ஆபத்தான வி‌ஷயமாக கருதப்படுகிறது. எனவே பாதுகாப்பு படைகள் மேலும் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Tags:    

Similar News