செய்திகள்
தலைமை நீதிபதி என்.வி.ரமணா

வக்கீல்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வலியுறுத்தல்

Published On 2021-06-26 19:56 GMT   |   Update On 2021-06-26 19:56 GMT
வக்கீல்கள், அவர்களைச் சார்ந்துள்ள பணியாளர்களை முன்களப் பணியாளர்கள் என அறிவித்து தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:


சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், ‘சட்டத்திலும், நீதிமுறைமையிலும் உள்ள முரண்பாடுகள்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை காணொலி வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா வெளியிட்டார்.

பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் பேசியபோது, ஐகோர்ட்டு நீதிபதிகள் சமீபத்தில் பங்கேற்ற இருநாள் மாநாட்டில், காணொலி வாயிலாக நடத்தப்படும் விசாரணைகளில் உள்ள இணையப் பயன்பாடு சிக்கல்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

கிராமப்புறங்கள், பழங்குடியினர் வசிக்கும் தொலைதூர மலைப்பாங்கான பகுதிகளில் இணையப் பயன்பாட்டில் உள்ள குறைபாடு, நீதி, நிர்வாக முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஆயிரக்கணக்கான இளம் வக்கீல்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கிறது என கவலை வெளியிட்டார்.



இணையப் பயன்பாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களையவும், கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து நிதியுதவியை எதிர்நோக்கியுள்ள வக்கீல்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய சட்டத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வக்கீல்களையும், அவர்களிடத்தில் பணியாற்றுபவர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News