செய்திகள்
மத்திய அரசு

மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி

Published On 2021-06-10 23:26 GMT   |   Update On 2021-06-10 23:26 GMT
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் ஏராளமான தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
புதுடெல்லி:

மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் ஏராளமான தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். நிரந்தர பணியில் இல்லாததால், அவர்கள் சமூக பாதுகாப்பு திட்ட வரம்புக்குள் வராமலே இருக்கிறார்கள்.

இந்த பிரச்சினையை தீர்க்க அவர்களை இ.எஸ்.ஐ. சட்ட வரம்புக்குள் கொண்டுவர மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதி அளிக்கப்படும்.

அவர்களை இ.எஸ்.ஐ. சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக உரிய அறிவிப்பாணை வெளியிடுமாறு அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கும்பணி, இ.எஸ்.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அறிவிப்பாணை வெளியிட்டவுடன், அங்குள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதிகளை பெறலாம்.

நோய் பலன்கள், மகப்பேறு பலன்கள், மாற்றுத்திறனாளி சலுகைகள், பணியாளரை சார்ந்தோருக்கான பலன்கள், இறுதிச்சடங்கு செலவுகள் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் பெறலாம். அவர்கள் நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்களில் அனைத்து மருத்துவ சேவைகளையும் பெற தகுதி பெறுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News