செய்திகள்
பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றும் நிதி மந்திரி பாலகோபால்

கேரளா பட்ஜெட்- கொரோனா சவால்களை எதிர்கொள்ள ரூ.20000 கோடி சிறப்பு தொகுப்பு அறிவிப்பு

Published On 2021-06-04 09:08 GMT   |   Update On 2021-06-04 09:08 GMT
கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு தடுப்பூசிகள் வாங்க பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. கடந்த 20ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. மாநில முதல்-மந்திரியாக பினராயி விஜயன் 2வது முறையாக பதவியேற்றார். அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. அதன்பின்னர் 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

இன்று காலை சட்டமன்றம் கூடியதும், புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் அப்போதைய நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று புதுப்பிக்கப்பட்ட பட்ஜெட்டை நிதி மந்திரி பாலகோபால் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில், 20,000 கோடி ரூபாய் நிதித்தொகுப்பு அறிவிக்கப்பட்டது. 2வது அலை பரவியதை அடுத்து, சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக ரூ.20,000 கோடி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அவசர நிலைகளுக்கு ரூ.2800 கோடி, மக்களுக்கு நேரடியாக வழங்க ரூ.8900 கோடி மற்றும் நிதிநிலையை செய்வதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு கடன்கள் மற்றும் வட்டி மானியங்களுக்கு ரூ.8300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு தடுப்பூசிகள் வாங்க ரூ.1000 கோடி, அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் வாங்க ரூ.500 கோடி, மருத்துவக் கல்லூரிகளில் தொற்று நோய்களுக்கான சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு, மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் கொண்ட தனிமை வார்டு மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்கான சிறப்பு ஐசியு வார்டுகள் ஏற்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News