செய்திகள்
பிரியங்கா காந்தி

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் - பிரியங்கா கோரிக்கை

Published On 2021-05-23 21:22 GMT   |   Update On 2021-05-23 21:22 GMT
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு, நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வு ஆகியவற்றை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு நேற்று ஆலோசனை நடத்தியது. அதற்கு முன்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இந்த கொரோனா 2-வது அலைக்கிடையே தேர்வு எழுதுவது பற்றிய தங்களது கவலைகளை வெளியிட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பும், ஆரோக்கியமும் முக்கியம்.

நாம் ஏன் இன்னும் பாடம் கற்கவில்லை? மூடப்பட்ட அறைக்குள் கொரோனா வேகமாக பரவும். உருமாறிய கொரோனா, குழந்தைகளை எளிதில் தாக்கும். மூடிய அறைக்குள் சில மணி நேரங்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் அல்ல.

மாணவர்களின் உடல்நலத்துடன் மனநலமும் முக்கியம். சில மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் ஏற்கனவே அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள்.

இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதன் அவசியத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிலும் தேர்வு பற்றிய முடிவை மாதக்கணக்கில் இழுத்தடிக்கிறார்கள். 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News